

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் 37 குடும்பங்களை சேர்ந்த 41 பேர் உயிரிழந்த நிலையில், 31 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலையும், ஒருவருக்கு ரூ.10 லட்சம் கருணை தொகையும் வழங்கப்பட்டது.
மீதம் உள்ள 5 குடும்பங்களில் மனைவி சுகன்யாவை இழந்த தெய்வேந்திரன் காவல்துறையில் பணியாற்றுவதாலும், மற்றொருவர் அரசு பணியில் உள்ளதாலும், ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதாலும், அவர்களின் குடும்பங்களில் யாருக்கும் அரசு வேலை வழங்கப்படவில்லை.
மேலும், ஏமூரை சேர்ந்த காளியப்பன் மனைவி அருக்காணி கூட்ட நெரிசலில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தில் வேலைக்கு செல்லும் நிலையில் 3 பேர் உள்ளதால், ஒருவருக்கு வேலை வழங்கினால் மற்ற இருவர் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி வேலை வேண்டாம் என மறுத்துவிட்டனர். சேலத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கோமதி தம்பதி மகன் ஸ்ரீநாத் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தில் யாருக்கும் வேலை வழங்கப்படாததால் நேற்று அதிகாரிகளை சந்தித்து முறையிட்டனர்.