“அதிமுகவுடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது” - பிரேமலதா திடீர் பிரகடனம்

“அதிமுகவுடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது” - பிரேமலதா திடீர் பிரகடனம்
Updated on
1 min read

“பழனிசாமி 2026-ல் கட்டாயம் தேமுதிக-வுக்கு மாநிலங்களவை சீட் தருவதாகக் கூறிவிட்டார். அதற்காக அவர்களுடன் தான் கூட்டணி என்று இப்போதைக்கு சொல்ல முடியாது” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேமுதிக மக்கள் விரும்பும் மகத்தான கூட்டணியை அமைக்கும். ஜன.9-ம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணியை அறிவிப்போம். நேற்று முளைத்த காளான் ஒரு நாள் மழைக்கே தாங்காது என்று நான் விஜய்யை குறிப்பிடவில்லை. புதிதாக 5 கட்சிகள் உருவாகியிருக்கிறது; அவர்களை சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

விஜய்யை நாங்கள் எப்போதும் எதிர்க்கவில்லை; எங்கள் வீட்டு பையன் என்று தானே சொல்லி வருகிறேன். அவர் விஜயகாந்த் மாதிரி சினிமாவிலும், அரசியலிலும் சாதிக்க வேண்டும். விஜய்யை கூத்தாடி என்று நான் சொன்னதே இல்லை. நடிகர்கள் யார் அரசியலுக்கு வந்தாலும் அப்படித்தான் மற்றவர்கள் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம். அதற்காக அவர்களுக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று கூற முடியாது. கூட்டணி விஷயத்தில் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட மாற வாய்ப்புள்ளது.

யார், யாருடன் கூட்டணியில் இருப்பார்கள் என்பதை சொல்ல முடியாது. பிஹாரில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கொடுத்து தான் வெற்றி பெற்றதாக ப.சிதம்பரம் கூறுகிறார். ஆனால் தமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுத்து தான் வெற்றி பெறுகிறீர்கள். அதை இல்லை என்று அவர் மறுப்பாரா?

வருகிற ஆட்சியில் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்புள்ளது. எங்கள் கட்சியிலிருந்து எம்எல்ஏ-க்கள் கட்சி மாறியது,மாநிலங்களவை சீட் தர மறுத்தது ஆகிய அனைத்தையும் சேர்த்துத்தான் துரோகம் என்றேன். பழனிசாமி 2026-ல் கட்டாயம் தேமுதிக-வுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும் என்று கூறிவிட்டார். அதை நாங்கள் 2025-ல் தருவார்கள் என்று நினைத்தோம். அதனால்தான் குழப்பம் ஏற்பட்டது. அதற்காக அவர்களுடன் கூட்டணி என்று இப்போதைக்கு சொல்ல முடியாது.

இந்த தேர்தல் நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும். வாக்குத் திருட்டு நடக்கக் கூடாது என்பதில் தேமுதிக உறுதியாக இருக்கிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்ததற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

“அதிமுகவுடன் கூட்டணி என்று இப்போது சொல்ல முடியாது” - பிரேமலதா திடீர் பிரகடனம்
காஞ்சிபுரத்தில் நாளை மக்களைச் சந்திக்கும் விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in