

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்: வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதால் நாகை உள்பட தமிழகத்தின் 8 துறைமுகங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 1-ம் எண் தொலைதூர புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகை மட்டுமின்றி சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 8 துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம், குளச்சல் ஆகியதுறைமுகங்களுக்கும் இது குறித்த எச்சரிக்கை செய்தி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மேற்கு- வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, செப்.23-ம் தேதி இரவு முதல் 24-ம் தேதி அதிகாலைக்குள் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.