

திருநெல்வேலி: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை தமிழகத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தொடங்கவுள்ளார். இதற்காக 2 நாள் பயணமாக நவம்பர் 25-ம் தேதி தமிழகம் வரும் அவர், பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடி, கட்சியை வலுப்படுத்த ஆலோசனைகள் வழங்க உள்ளார்.
கடந்த தேர்தல்களில் பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும், அதை சரிசெய்து தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்கச் செய்யவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
திருநெல்வேலி, கோவை மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட பாஜகவினர் கூறும்போது, “தமிழகத்துக்கு வரவுள்ள பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மற்றும் திருநெல்வேலியில் நிர்வாகிகளை சந்திக்கிறார். இதையொட்டி திருநெல்வேலியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த, கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி உள்ளார். இதனால் பொதுக்கூட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.