

பாஜக-வின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் இன்று புதுச்சேரி வருகிறார். அதுசமயம் பாஜக பூத்கமிட்டி கூட்டங்களிலும் அவர் பங்கேற்கிறார்.
தேசிய செயல் தலைவர் வருகையொட்டி புதுச்சேரி மாநில பாஜக தலைவர் வி.பி.ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நேற்று காலை டெல்லி சென்றனர். அங்கு அவர்கள் செயல் தலைவருடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் அவர்கள் நேற்றே புதுச்சேரி திரும்பினர்.
இதுதொடர்பாக பாஜக தரப்பில் விசாரித்தபோது, ”டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னை வரும் செயல் தலைவர் நிதின் நபினுக்கு தமிழக பாஜக சார்பில் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப் படுகிறது. தொடர்ந்து அங்கிருந்து அவர் கார் மூலம் புதுச்சேரி வருகிறார். புதுவை கோரிமேடு எல்லையில் அவருக்கு புதுச்சேரி மாநில பாஜக-வினர் வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் பாரதியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
பின்னர் தனியார் ஹோட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் உணவருந்துகிறார். அதன் பிறகு மாலை 3 மணிக்கு மேல் அங்கு பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு, இன்னொரு தனியார் ஹோட்டலில் நடக்கும் ‘சக்தி கேந்திரா’ எனப்படும் பூத்கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார். புதுவையில் இரவு தங்கும் நிதின் நபின், ஞாயிற்றுக்கிழமை காலையில் அரவிந்தர் ஆசிரமத்துக்குச் செல்கிறார்.
அதன் பிறகு காலை 9.15 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் மணவெளி தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் செயல் தலைவர், முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார். இதையடுத்து காலை 11.45 மணிக்கு கணபதிசெட்டிகுளத்தில் பூத்கமிட்டி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அவருடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் புதுவை வருகிறார்" என்று தெரிவித்தனர்.
ஆளும் கூட்டணியில் அதிருப்திகள் தலைதூக்கி வரும் நிலையில் பாஜக தேசிய செயல் தலைவர் புதுச்சேரி வருகை தருவது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.