“தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க ஸ்டாலின், உதயநிதி முயற்சி” - நிர்மல் குமார் குற்றச்சாட்டு

அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல்குமார்

கோப்புப் படம் 

Updated on: 
2 min read

மதுரை: “தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க இப்போதும் ஸ்டாலினும், உதயநிதியும் முயற்சிக்கிறார்கள். அதனால் தான், இந்த ஆட்சி இத்தனை மாதங்கள்தான் இருக்கும் எனச் சொல்லி வருகிறார்கள். பாஜக ஆதரவுடன் அதிமுக - திமுக இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சி இப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது,” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆதரவுடன் திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மதுரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்று கடனுதவி வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவது குறித்து ஏற்கெனவே அதிமுக, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர்.  கரூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி அனைத்து இடத்திலும் நடக்கிறது. இப்போது அந்த முயற்சியை உதயநிதியும்,  ஸ்டாலினும் பெரிய அளவில் முடுக்கிவிட்டு இருக்கின்றனர். அதனால் தான் அவர்கள் ‘இத்தனை மாதம் தான் இந்த ஆட்சி இருக்கும்’ என திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.  

அவர்களின் ஒரே முயற்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜகவின் பின்புலத்தோடு பாஜகவின் ஆதரவோடு மீண்டும் எடப்பாடியும் திமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும்.

இடைத்தேர்தலில் திமுக - அதிமுக இருவரும் சேர்ந்து பொது வேட்பாளர் நிறுத்துவதற்கான திட்டம், கனிமொழி, நேரு ஆகியோரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இப்போது அடுத்து வரும் இடைத்தேர்தலில் திமுக, அதிமுகவும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தலாம் என முடிவு செய்திருக்கின்றனர். அதிலும் உட்கட்சியில் எதிர்ப்பு கிளம்பினால் மட்டுமே தனியாக வேட்பாளர் நிறுத்தப்படலாம்.

திமுக - அதிமுக சேர்ந்து எப்படியாவது தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால், எங்களுக்கு விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை. 

எல்லா எம்எல்ஏக்களையும் தொடர்பு கொண்டு அவர்களை விலைக்கு வாங்குவதுபோல பேசிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவினரால் தான் இப்பிரச்சினை வருகிறது. இந்த பேரம் தவெக ஆட்சி அமைவதற்கு முன்னர் இருந்தே நடக்கிறது. இப்போது வெட்டவெளிச்சம் ஆகிறது. இதனை மறைத்துவிட்டு  மூன்று மாதத்திற்குள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்கிறார்கள். அதெல்லாம் நூறு சதவீதம் நடக்காது. 

தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.70 கோடி வரைக்கும் ஆஃபர் கொடுத்து மாட்டிக்கொண்டு கைதாகி நிற்கின்றனர். அதிகபட்சமான பணம் எம்எல்ஏ பேரத்தில் மாட்டியுள்ளது. இதில் ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டதா என்று விசாரணை நடந்து வருகிறது. 

பால்விலை உயர்வு குறித்து, வதந்திகள் வருவதைப் பற்றி பேச வேண்டாம். பேச்சுவார்த்தை அந்தந்த துறை சார்பாக நடைபெறுகிறது. அதை வைத்துக்கொண்டு ஒரு முடிவு செய்யப்பட்டால் யாருக்கும் பிரச்சினை இல்லை என முடிவு செய்யப்பட்டால் துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்படும் ஒரு அனுமானத்தில் அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மதுரை சிறை காவலருக்கும் கைதிக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. சிறைத் துறையில் சீரமைப்பு பணிகள் குறித்து முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.  சிறைவாசிகள், காவலர்கள் சந்திக்கும் இடத்தில், சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

டாஸ்மாக்கில் முன்பு காலி பாட்டில்களுக்கு வசூல் நடந்திருக்கிறது. பதவிக்கும், பணியிடமாற்றத்திற்கும் ரூ.35 லட்சம் வாங்கியதற்கான ஆதாரம் இருக்கிறது. இதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. பாட்டிலுக்கு பணம் வாங்குவது பல ஆண்டு பிரச்சினை. 2003-ல் இருந்து இந்த நடைமுறை உள்ளது. 23 ஆண்டுகளாக உள்ள பழக்கத்தை மாற்றும்போது பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் சரிசெய்ய வேண்டியுள்ளது. 

மக்களின் ஆதரவு முழுமையாக உள்ளதால், வரும் எல்லா தேர்தலிலும் 100 சதவீதம் தவெக மட்டும்தான் வெற்றி பெறும். கடந்த 6 மாத ஆட்சியில் எல்லாத்துறையிலும் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட்டிருக்கிறது. கடைநிலையில் உள்ள லஞ்சம் ரெய்டு நடத்தி தடுக்கப்பட்டு வருகிறது. 

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தர வேலைவாய்ப்பு கேட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குக் கால அவகாசம் கேட்டுள்ளோம். 

மேலும், மின்சாரத் துறையில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. இவவற்றை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.  யாருக்கும் தெரியாமல் மின்தடை ஏற்படுத்தக்கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும்” இவ்வாறு அமைச்சர் கூறினார்.  

<div class="paragraphs"><p>அமைச்சர் நிர்மல்குமார்</p></div>
அமெரிக்காவின் ஓஹியோ ஆளுநர் தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வி

X