கோவை: டீ கடைக்காரரை கடத்திய 9 பேர் கைது

சிறை
சிறை
Updated on
1 min read

கோவை: கோவையில் முன்விரோதம் காரணமாக டீக்கடைக்காரரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் வேல்முருகன்(34). கோவை சேரன்மாநகரில் தங்கியிருந்து டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நண்பர் நாகராஜ்(36). இவர்கள் இருவரும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்குள்ளேயே அடிக்கடி சந்தித்துக்கொண்ட இருவரும், முதலில் யார் பிணையில் வெளியே செல்கிறார்களோ அவர், மற்றவருக்கு பிணை கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்று பேசியதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் வேல்முருகனுக்கு பிணை கிடைத்தது. அவர் மத்திய சிறையில் இருந்து பிணையில் வெளியே வருவதற்கு முன்பு, தனது நண்பர் நாகராஜை சந்தித்து நான் பிணையில் செல்கிறேன். ஒரு மாதத்துக்குள் உனக்கும் பிணை கிடைக்க உதவி செய்வேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் வேல்முருகன் பிணையில் வெளியே வந்த பின்னர் 5 மாதம் ஆகியும் தனது நண்பர் நாகராஜூக்கு பிணை எடுக்க உதவி செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறையில் இருக்கும் நாகராஜை அவருடைய நண்பர்கள் பார்க்க சென்றபோது அவர் அழுது புலம்பி உள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது கடையில் வேல்முருகன் இருந்தார். அப்போது ஒரு காரில் வந்து 7 பேர் இறங்கினர். பின்னர் அந்த கும்பல் வேலமுருகன் கடைக்கு சென்று அவரை வெளியே அழைத்து வந்தது. தொடர்ந்து அவரை அந்த காருக்குள் ஏற்றி கடத்தி சென்றனர். பிறகு, ஒரு அறைக்குள் அவரை அடைத்து வைத்து அவரிடம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கேட்டு மிரட்டியதுடன் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதற்கிடையே அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த வேல்முருகன் இது குறித்து பீளமேடு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், சேரன்மாநகர் மற்றும் பீளமேட்டை சேர்ந்த 15 பேர் கொண்ட கும்பலுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த தர்மராஜ் (32), அதே மாவட்டம் செல்லூரை சேர்ந்த வெங்கட்பிரபு (25), தூத்துகுடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த இசக்கிமுத்து(32), தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த சசிகுமார் (23), கோவை ரத்தினபுரியை சேர்ந்த சுந்தர மகாலிங்கம் (29), பெங்களூருவை சேர்ந்த சுதீப் 23) உட்பட 9 பேரை கைது செய்தனர். இதில் மேலும் தொடர்புடைய சிலரை தேடி வருவதாக பீளமேடு போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

சிறை
மதுரை: எளிதில் ஜாமின் பெறும் கஞ்சா விற்பனையாளர்கள் - காரணம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in