

சென்னை: ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி அன்று வெளியிட்டது. அதன்படி, குரூப்-2 பதவிகளில் 41 காலியிடங்கள், குரூப்-2 ஏ பதவிகளில் 780 இடங்கள் மொத்தம் 821 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற 9-ம் தேதி (புதன்கிழமை) முடிவடைகிறது.
பட்டதாரிகளும், முதுகலை பட்டதாரிகளும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கிடையே, குரூப்-2, 2-ஏ தேர்வில் புதிய பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் உயர்த்தப்பட்டுள்ளது.
குரூப்-2 ஏ தேர்வில் தமிழ்நாடு தலைமைச் செயலக உதவியாளர் (நிதிப்பிரிவு) காலியிடங்களின் எண்ணிக்கை 7-லிருந்து 17 ஆக அதிகரிக்கப்படுகிறது. மேலும், குரூப்-2 தேர்வில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு பணிகள் துறை நன்னடத்தை அலுவலர் (காலியிடங்கள் 2) புதிதாக சேர்க்கப்படுகிறது.
அதேபோல், குரூப்-2 ஏ தேர்வில், தொழிற்கூட்டுறவு சங்கங்களின் மேற்பார்வையாளர் (காலியிடங்கள் 10), குழந்தைகள் நலன், சிறப்பு பணிகள் துறை உதவியாளர் (காலியிடங்கள் 3 ) ஆகிய பதவிகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. இதனால் ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 846 ஆக அதிகரித்துள்ளது.