டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
Updated on
2 min read

சென்னை: டாஸ்​மாக் முறை​கேடு தொடர்​பாக, முன்​னாள் அமைச்சர் செந்​தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்​றும் சில நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் புதி​தாக வழக்குப்பதிவு செய்​துள்​ளனர். இதுதொடர்​பாக 45 இடங்​களில் சோதனை நடத்தப்பட்டது.

தமிழக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மீது வேலை​வாய்ப்பு மோசடி, சட்​ட​ விரோதப் பணப் பரிவர்த்​தனை மற்​றும் டாஸ்​மாக் ஒப்​பந்த முறை​கேடு தொடர்​பான வழக்​கு​கள் ஏற்​கெனவே உள்​ளன. இந்​நிலை​யில், தமிழகத்​தில் கடந்த 2021 முதல் 2025 வரை டாஸ்​மாக் பார் உரிமங்​கள், போக்​கு​வரத்து ஒப்​பந்​தங்​கள், மது​பான விநி​யோகம் மற்​றும் டெண்​டர் ஒதுக்​கீடு​களில் பல கோடி ரூபாய் முறை​கேடு நடை​பெற்​றுள்​ள​தாகப் புகார் எழுந்​துள்ளது. இதுதொடர்​பாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உட்பட 7 பேர், மற்​றும் சில நிறு​வனங்​கள், அடை​யாளம் தெரி​யாத நபர்​கள் சிலர் மீது தற்​போது லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் புதி​தாக வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கின் அடிப்​படை​யில் சென்​னை, கரூர், கோவை, புதுக்கோட்​டை, திரு​வாரூர், தஞ்​சாவூர், நாமக்​கல், திருப்​பூர், ஈரோடு, நீல​கிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், விழுப்​புரம் மற்​றும் சிவகங்கை மாவட்​டங்​களில் டாஸ்​மாக் அலு​வல​கங்​கள், கிடங்குகள், தனி​யார் மது​பான உற்​பத்தி நிறு​வனங்​கள், ஒப்பந்ததா​ரர்​கள் மற்​றும் அதி​காரி​களுக்​குச் சொந்​த​மான 45 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் நேற்று திடீர் சோதனை மேற்​கொண்​டனர். அப்​போது, வரவு -செலவு பதிவு​கள், டெண்​டர் ஆவணங்​கள், கணினி தகவல்​கள் மற்​றும் ஒப்​பந்த கோப்​பு​கள் ஆய்வு செய்​யப்​பட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சென்னை ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் தங்கியுள்ள முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யிடம் கூடு​தல் எஸ்.பி. யுவ​ராஜ் தலை​மையி​லான குழு​வினர் சுமார் மூன்​றரை மணி நேரம் நேற்று விசா​ரணை நடத்​தினர்.

செந்​தில் பாலாஜி​யின் சொந்த மாவட்​ட​மான கரூரில், அவரது பெற்​றோர் வசிக்​கும் ராமேஸ்​வரப்​பட்டி வீடு, முன்​னாள் நேர்​முக உதவி​யாளர் சுப்​பிரமணி, திமுக நிர்​வாகி பாஸ்​கர், சக்தி மெஸ் கார்த்​தி, ரமேஷ் ஆகியோரது வீடு​கள் மற்​றும் டாஸ்​மாக் அலுவலகம் உள்​ளிட்ட 6 இடங்​களில் சோதனை நடை​பெற்​றது.

இதற்​கிடை​யில், சென்னை தி.நகரில் உள்ள கேல்ஸ் டிஸ்​டிலரீஸ் அலு​வல​கம், எஸ்​.என்​.ஜே. குழு​மத் தலைமை அலு​வல​கம், புதுக்​கோட்​டை, திரு​வாரூர், கோவை, தஞ்​சாவூர் உள்​ளிட்ட மாவட்​டங்​களில் செயல்​படும் தனி​யார் மது​பான ஆலைகள், காலி பாட்​டில் சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​கள், டாஸ்​மாக் கிடங்​குகளி​லும் சோதனை நடை​பெற்​றது. நாமக்​கல், ஈரோடு, திருப்​பூர், சிவகங்கை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் ஒப்​பந்த ஆவணங்​கள் மற்​றும் இருப்பு விவரங்​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன.

முதல் தகவல் அறிக்​கை​யில் இடம்​பெற்​றுள்ள குற்​றச்​சாட்​டு​களின்​படி, பார் உரிமங்​களுக்​கான டெண்​டர்​களில் ஒரே வங்​கி​யில் இருந்து தொடர்ச்​சி​யான எண்​களில் டிமாண்ட் டிராப்ட்​டு​கள் எடுத்து பலர் பெயரில் விண்​ணப்​பங்​கள் தாக்​கல் செய்யப்பட்டதாக கூறப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் போட்டியாளர்கள் வெளி​யேற்​றப்​பட்​டு, விருப்​ப​மான நபர்​களுக்கு உரிமங்​கள் வழங்​கப்​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டுள்​ளது. மேலும், உரிமம் புதுப்​பிக்​கப்​ப​டாத பார்​கள் மீது நடவடிக்கை எடுக்​காத​தால் கோவை வடக்​கு, கோவை தெற்கு மற்​றும் நீல​கிரி மாவட்​டங்​களில் மட்​டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதே​போல், டாஸ்​மாக் போக்​கு​வரத்​துக்​காக ஆண்​டுக்கு ரூ.100 கோடி செல​விடப்​படு​கிறது. இதிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. காலி பாட்​டில்​கள் விநி​யோகத்​தில் போலி பில்​கள் மூலம் பணம் கைமாறிய​தாக​வும் டாஸ்​மாக் கடைகளில் கூடு​தல் தொகை வசூலிக்​கப்​பட்​ட​தாக​வும் எப்​ஐஆரில் குற்​றச்​சாட்​டு​கள் இடம்​பெற்​றுள்​ளன. இந்த வழக்​கில் 145 பக்க ஆவணங்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. இதுதொடர்​பாக அமலாக்​கத் துறை​யும் ஏற்​கெனவே விசா​ரணை நடத்தி வருகிறது.

மாநிலம் முழு​வதும் நடை​பெற்ற சோதனை​களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்​கள், மின்​னணு சாதனங்​கள் மற்​றும் கணக்​குப் பதிவு​கள் தடய​வியல் ஆய்​வுக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளன. அவற்​றின் அடிப்​படை​யில் மேலும் சிலரிடம் விசா​ரணை நடத்​தப்​படலாம். வழக்​கின் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் விரை​வில் தீவிரப்​படுத்​தப்​படும் என்று போலீஸார் தெரி​வித்​தனர்.

சோதனை குறித்து செய்​தி​யாளர்​களிடம் பேசிய செந்​தில் பாலாஜி, “என் அறை​யில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் எந்த ஆவண​மும் கைப்​பற்​றப்​பட​வில்லை என்று அதி​காரி​கள் எழுத்​துப்​பூர்​வ​மாக பதிவு செய்து அதன் நகலை வழங்​கி​யுள்​ளனர். இந்த வழக்கு தொடர்​பாகச் சட்​டரீ​தி​யாகப் பதிலளிப்​போம். ‘மடி​யில் கனமில்​லை; வழி​யில் பயமில்​லை’ என்​பதே எங்​கள் நிலைப்​பாடு” என்​றார்.

டி.ஆர்​.​பாலு மகன்

திரு​வாரூர் மாவட்​டம் மன்​னார்​குடி அருகே கர்​ணாவூர், புதுக்​கோட்டை மாவட்​டம் கந்​தர்​வக்​கோட்டை அருகே கல்​லாக்​கோட்​டை, விராலிமலை அருகே குன்​னத்​தூர் ஆகிய இடங்​களில் இயங்கி வரும் தனி​யார் மது​பான ஆலைகளி​லும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இதில், கர்​ணாவூரில் இயங்​கும் மது​பான ஆலை தி​முக முன்​னாள் மத்​திய அமைச்​சர் டி.ஆர்​.​பாலு​வின் மகன் ராஜ்கு​மாருக்கு சொந்​த​மானது.

மேலும், தஞ்​சாவூர் மங்​களபுரத்​தில்​ மது​பான காலி பாட்​டில்​களைச்​ சுத்​தி​கரிப்​பு செய்​து ஆலைக்​கு அனுப்​பும்​ நிறு​வனத்​தின்​ அலு​வலகத்​திலும்​ இந்​த சோதனை நடைபெற்​றது.

டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு: 45 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
டெலிகிராம் சிஇஓ சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி: ரஷ்யா அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in