

சீனா, வியட்நாம் வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்துக்கு வந்த எம்.வி.நவதா பூம் சரக்கு கப்பல்.
தூத்துக்குடி: சீனா, வியட்நாம் வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு புதிய சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் சுசாந்தகுமார் புரோஹித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சீனா, வியட்நாம், இந்தியாவை இணைக்கும் வகையில் புதிய சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரீஜினல் கண்டெய்னர் லைன் நிறுவனத்தின் மூலம் நேரடியாக சீனா, வியட்நாம் வழியாக தூத்துக்குடிக்கு சரக்கு கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் முறையாக ‘எம்.வி.நவதா பூம்’ என்ற சரக்குப் பெட்டக கப்பல் தூத்துக்குடிக்கு வந்தது. அந்த கப்பலை வ.உ.சி. துறைமுக அதிகாரிகள், சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள் வரவேற்றனர். 147.82 மீட்டர் நீளமும், 23.38 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல், 1,100 சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது.
இந்தக் கப்பல் சீனாவின் கின்ஷோ துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, வியட்நாமின் ஹைபோங் துறைமுகம் வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வந்தடைந்தது. தொடர்ந்து காட்டுப்பள்ளி துறைமுகம் வழியாக வியட்நாமின் சூலாய் துறைமுகத்தை சென்றடைகிறது. அங்கிருந்து கின்ஷோவுக்கு திரும்புகிறது. சீனாவின் கின்ஷோவில் இருந்து வியட்நாம் வந்தடைய 13 நாட்களும், வியட்நாமின் ஹைபோங்கில் இருந்து தூத்துக்குடியை வந்தடைய 12 நாட்களும் ஆகிறது.
இந்தக் கப்பல் தற்போது வாரத்துக்கு இருமுறை மட்டும் இயக்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களின் தேவையைப் பொறுத்து சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இந்தப் புதிய கப்பல் சேவை மூலம் தென் சீனா மற்றும் வியட்நாம் உடனான துறைமுகத்தின் கடல்வழி இணைப்பு மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூரிய மின்தகடு உற்பத்தி, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில் துறைகளுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.
வ.உ.சி துறைமுகம் 2026-27 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 4.42 லட்சம் சரக்குப் பெட்டகங்களை கையாண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 4.28 சரக்குப் பெட்டகங்களை கையாண்டிருந்தது. இது 3.18 சதவீத வளர்ச்சி ஆகும்.
வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குத் தளம் 7-ல் அமைய உள்ள மூன்றாவது சரக்குப் பெட்டக முனையம் மற்றும் வெளித்துறைமுகத் திட்டம் ஆகியவற்றின் மூலம், சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் அதிகரித்து, கூடுதல் கப்பல் சேவைகளை ஈர்ப்பதுடன், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் முக்கிய சரக்குப் பெட்டக மையமாக வ.உ.சி. துறைமுகம் விளங்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.