

சென்னை: ‘நேபாள பெருவெள்ள பாதிப்பில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்’ என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் சுமார் 60 தமிழர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையையும் அளிக்கிறது.
நேபாள நாட்டு அரசுடன் இணைந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட மத்திய அரசையும், அப்பணிகளுக்கான ஒருங்கிணைப்பையும், முறையான தகவல் பரிமாற்றத்தையும் உறுதி செய்திட மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்.
காணாமல் போனதாக தேடப்படும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் இன்று காலை 8.30 மணியளவில் ரசுவா மாவட்டத்தில் போட்டே கோசி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத நிலையில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 55 பேர் உயிரிழப்பு என உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், 291 வெளிநாட்டவர் உள்பட 384 சுற்றுலாப் பயணிகளைக் காணவில்லை என்று நேபாள சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. இதில் 105 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.