

திண்டுக்கல்: “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் வாழ விட வேண்டும் என்ற துளிகூட எண்ணம் இல்லாத கட்சிகள்தான் திமுக, அதிமுக” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காஜா உசேன் அகமதுவை ஆதரித்து எரியோட்டில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: “இந்தியாவை யார் ஆள்வது என்ற போட்டி வரும்போது இந்த கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்கின்றன.
தமிழ்நாட்டை யார் ஆள்வது என்ற போட்டி வரும்போது திமுக மற்றும் அதிமுக ஊழல் கட்சிகளோடு பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் 60 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியை செய்து கொண்டிருக்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு ஊழல் லஞ்சத்தை பெருக்குவதிலும், இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதிலும், மக்களின் நலங்களை கெடுப்பதிலும் இந்த இரு பெரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்தி வருகின்றன.
இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் வாழ விட வேண்டும் என்ற துளி கூட எண்ணம் இல்லாத கட்சிகள்தான் இவை. விவசாயிகள் இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மீனவர்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்கிறது.
கல்வியை கொடுப்பதை தவிர அரசுக்கு என்ன வேலை இருக்கிறது. ஏன் இந்த அரசு மாணவர்களுக்கு கல்வியை இலவசமாக வழங்கக் கூடாதா?.
கல்வி, மருத்துவம் மற்றும் தண்ணீர் இங்கு வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது. மலையை வெட்டி எடுப்பதையும், மணலை கொள்ளையடிப்பதையும் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நரி, ஆடுகளை பட்டியலில் அடைத்து வைத்து நான் வெற்றி பெற்றால் உங்கள் அனைவருக்கும் போர்வை தருவேன் என்று கூறி தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனது. அதன் பிறகு சக நரிகளைக் கொண்டு அனைத்து ஆடுகளின் தோல்களை உரித்தது. அதற்கு ஆடுகள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, உங்களுக்கு போர்வை தரப் போறேன். அதற்காக உங்கள் தோலை உரிக்கிறோம் என்றது.
அனைத்து வளமும் உள்ள தமிழ்நாட்டில் பசி இருக்கிறது, வறுமை இருக்கிறது, பட்டினி இருக்கிறது. மதுக்கடைகளை மூடுவேன். இயற்கையான முறையில் தொழிற்சாலைகள் அமைத்து அரசுக்கு பலவகையில் வருமானங்கள் தேடிக் கொடுப்பேன். சாதி பார்க்காமல் சாதிக்க துடிக்கின்ற நல்ல மனிதனான வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசேனுக்கு விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்றார் சீமான்.