

ஆட்சியில் பங்கு கேட்டுப் புறப்பட்ட தமிழக காங்கிரஸாரை டெல்லிக்கு அழைத்துப் பேசிய தலைமை, “இந்த விஷயத்தில் ராகுல் காந்தி உரிய முடிவெடுப்பார். இது விஷயமாக இனி நீங்கள் யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது” என வாய்ப்பூட்டுப் போட்டு அனுப்பி வைத்தது. இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தர திமுக மறுத்தால் புதுச்சேரியிலும் நாம் தனித்தே ஆட்சியமைக்க வேண்டும்” என்று தங்கள் பங்குக்கு புதுச்சேரி காங்கிரஸார் ராகுலிடம் முறையீடு செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
“புதுவையில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையில் தான் கூட்டணி அமைய வேண்டும். இம்முறை காங்கிரஸ் குறைந்தது 20 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும்” என காங்கிரஸ் இளவட்டங்கள் ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வருகின்றன. தவெக-வுடன் கூட்டணி வைத்தால் தாங்கள் நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொள்ளமுடியும் என்பதும் இவர்களது கணிப்பாக இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் சீனியர் சிட்டிசன்களோ, “கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வை காங்கிரஸ் வீழ்த்தியதில் திமுக-வின் பங்கு மிக முக்கியமாக இருந்தது. பல தொகுதிகளில் திமுக தாராளமாக செலவு செய்ததும் காங்கிரஸ் வெற்றிக்கு கைகொடுத்தது. அப்படி இருக்கையில், இம்முறை திமுக-வை ஒதுக்கிவிட்டு போட்டியிட்டால் நிதி ஆதாரத்தை திரட்டுவதிலும் தகுதியான வேட்பாளர்களைத் தேடுவதிலும் சிக்கல் ஏற்படும். அத்துடன், காங்கிரஸை விட்டு திமுக ஒதுங்கினால் இண்டியா கூட்டணியில் இருக்கும் வேறு சில கட்சிகளும் விலகிப் போய்விடும். அதனால் திமுக அதிகமான இடங்களில் போட்டியிடும் சூழலும் உருவாகலாம்” என்று கவலைப்படுகிறார்கள்.
திமுக-வுக்கோ, காங்கிரஸ் நம்மோடு இல்லாவிட்டால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கொத்தாக நமக்குக் கிடைக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது. தமிழகத்திற்காக எடுக்கப்படும் முடிவு தான் புதுச்சேரியிலும் அமல்படுத்தப்படும் என்றாலும் கூட்டணி தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸாரையும் தனியே அழைத்துக் கருத்துக் கேட்டிருக்கிறது டெல்லி தலைமை.
இது தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேயிடமும் ராகுலிடமும் தங்களது கருத்துகளை எடுத்துவைத்த புதுச்சேரி காங்கிரஸார், “தமிழகத்தில் திமுக ஆட்சியில் பங்கு தராவிட்டால் புதுவையிலும் நாம் அவர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டாம். தனித்தே ஆட்சி அமைக்கும் விதமாக அதிகமான தொகுதிகளில் நாம் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி, டெல்லி சென்று திரும்பிய புதுச்சேரி காங்கிரஸார் சிலர் நம்மிடம் பேசுகையில், "கடந்த 2006-ல் தமிழகத்தில் திமுக 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு 21 இடங்கள் தேவை என்ற நிலையிலும் அப்போது திமுக தனித்தே ஆட்சி அமைத்தது. 21 எம்எல்ஏ-க்களை வைத்திருந்த காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளித்தது. அப்போது புதுவையில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் வென்றது. கூட்டணியில் இருந்த திமுக 7 இடங்களையும், பாமக 2 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன. ஆனபோதும் காங்கிரஸ் தனித்தே ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தது.
இதேபோல், 2016-ல் புதுவையில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்றது. மெஜாரிட்டிக்கு கூடுதலாக ஒரு இடம் தேவைப்பட்டது. இரண்டு இடங்களில் வென்றிருந்த திமுக அந்த ஆதரவைத் தந்தது. அப்போது திமுக-வுக்கு அமைச்சரவையில் பங்கு தரவில்லை. இதன்படியே, இந்தமுறை தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஆட்சியில் திமுக பங்கு தராவிட்டால் புதுவையில் காங்கிரஸ் தனித்தே ஆட்சி அமைக்கும் வகையில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறோம்” என்றனர்.
“இங்கிருப்பவர்கள் என்னதான் மாய்ந்து மாய்ந்து பேசினாலும் டெல்லி காங்கிரஸும் சென்னை திமுக-வும் என்ன சொல்கிறதோ அதற்கு இங்கிருக்கும் நிர்வாகிகள் கடைசி நேரத்தில் கட்டுப்பட்டுப் போய்விடுவார்கள்” என்றும் சொல்கிறார்கள் விஷயமறிந்த இரண்டு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள்.