நீட் பிரச்சினை: சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நீட் பிரச்சினை: சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
Updated on
1 min read

சென்னை: டெல்லி போராட்டத்தின் தாக்கத்தால், நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்து சென்னையில் பல்வேறு இடங்களில் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் இன்றும் போராட்டம் நடத்தினர். எழும்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்தும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே இளைஞர் பெருமன்றத்தினர் மற்றும் மாணவர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திரண்டனர்.

போலீஸார் அனுமதிக்காத நிலையிலும், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மாணவிகளை பெண் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதேபோல மாநிலக் கல்லூரி மற்றும் புதுக்கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான பாலன் இல்லம் வளாகத்தில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் 3-வது நாளாக தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தினர்.

திருவொற்றியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகளும் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலரை போலீஸார் கைது செய்ததைத் தொடர்ந்து, 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இதேபோல், அண்ணாசாலையில் பெரியார் சிலை முன்பும் நேற்று மாலை போராட்டம் நடத்த மாணவர் அமைப்பினர் கொடியுடன் திரண்டனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர்களை போலீஸார் சமாதானம் பேசி கலைந்து செல்ல வைத்தனர். இதேபோல் சென்னையில் மேலும் சில இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

நீட் பிரச்சினை: சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
“பழிவாங்கும் நடவடிக்கை கூடாது” - உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய சோனம் வாங்சுக் நிபந்தனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in