

கரூர்: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சபரிமலை பக்தர்கள் சென்ற கார், முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் மங்களபுரத்தைச் சேர்ந்தவர் மணி என்கிற மணிகண்டன் (43). அவரது மகன் ஹரிஷ் (17). அதே ஊரை சேர்ந்த கோவிந்தன் (60), தனுஷ் (21). சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்து புழுதி கொட்டையை சேர்ந்தவர் சிதம்பரம் (45), அவர் மகள் தன்ஷிகா (8), அதே ஊரை சேர்ந்த பழனிவேல் (38).
இவர்கள் 7 பேரும் சபரிமலை சென்று விட்டு காரில் நேற்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று (நவ.28ம் தேதி) அதிகாலை 1.45 மணிக்கு அரவக்குறிச்சி பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் லாரியின் ஸ்டெப்னி டயர் கழண்டு விழுந்த நிலையில் லாரி நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் விபத்தில் காரை ஓட்டி வந்த மணிகண்டன் (43), கோவிந்தன் (60), பழனிவேல் (38) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி போலீஸார் மற்றும் அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர்.
மேலும் காயமடைந்த தனுஷ், ஹரிஷ், சிதம்பரம், தன்ஷிகா ஆகிய 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதில் ஹரிஷ் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சபரிமலை சென்று திரும்பிய பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.