

கோப்புப் படம்
புதுச்சேரி: இந்தியாவையே அலற வைத்த போலி மருந்து விவகாரம், பல ஆண்டுகளாக நிறைவேறாத மாநில அந்தஸ்து, நிதி கமிஷனில் புதுச்சேரியை இதுவரை சேர்க்காதது, பொதுப் பணித் துறை உயரதிகாரியே லஞ்ச வழக்கில் சிக்கியது என பல்வேறு பிரச்சினைகள் தேசிய ஜனநாயக கூட்டணியை வரிசைக்கட்டி வலம் வந்தன.
வழக்கமாக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் செய்யும் ரங்கசாமி, இம்முறை முந்திக் கொண்டார். எதிர்தரப்பில், காங்கிரஸ் - திமுக இடையே ஈகோவால் இண்டியா கூட்டணியே சிதைந்துவிட்டது.
காங்கிரஸில் கட்சிக்கு கட்டுப்படாத போட்டி வேட்பாளர்கள் என கூட்டணி தர்மத்தை மீறி 22 தொகுதிகளில் கை சின்னம் களம் இறங்கி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பணி என இண்டியா கூட்டணியை விட்டு தனி வழியில் களம் இறங்கி விட்டன. திமுகவும் தனது தொகுதிகளில் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
காங்கிரஸுக்குள் போட்டி வேட்பாளர்கள் தொடங்கி உள்ளுக்குள் தலைவர்களுக்கான பிரச்சினை என பல பிரச்சினைகள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இண்டியா கூட்டணி சிதறிப் போனதால் என்டிஏ கூட்டணி குஷியில் உள்ளது. ஆனால், என்டிஏ கூட்டணியிலும் என்.ஆர்.காங்கிரஸில் சீட் கேட்டு வாய்ப்பு கிடைக்காதவர்கள் தேர்தல் களத்தில் சுணக்கமாக உள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த 2006-க்கு பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை. பாஜக மேலிடம் உள்ளாட்சித் தேர்தலை கண்டிப்பாக நடத்த விரும்புகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு இன்னும் 6 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் வருவது உறுதி. அதில் வாய்ப்பு கிடைக்கும் என சீட் கிடைக்காத தனது கட்சியினரை முதல்வர் ரங்கசாமி சமாதானப்படுத்தி வருகிறார்.