“தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர்” - சாலமன் பாப்பையாவுக்கு நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

“தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர்” - சாலமன் பாப்பையாவுக்கு நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
Updated on
1 min read

சென்னை: ‘எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சாலமன் பாப்பையா’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழறிஞரும், தனது நகைச்சுவை கலந்த பேச்சாற்றலால் தலைமுறைகளை மகிழ்வித்தவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தார் என்ற செய்தி என்னை ஆழ்ந்த அதிர்ச்சியிலும் மிகுந்த வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களின் இல்லங்களில் எந்தப் பண்டிகை வந்தாலும், பட்டிமன்றம் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் சாலமன் பாப்பையா.

எளிமையான தமிழ், நகைச்சுவை ததும்பும் பேச்சு, ஆழமான சிந்தனை என தனது தனித்துவமான ஆளுமையால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது குரலும், கருத்துகளும், கலகலப்பான பேச்சும் எண்ணற்ற குடும்பங்களின் பண்டிகை மகிழ்ச்சியில் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே இருந்தன. ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த அவரது இழப்பு, தமிழ் உலகிற்கே பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேராசிரியர் சாலமன் பாப்பையா மறைந்தாலும், அவரது தமிழும், நகைச்சுவையும், பட்டிமன்றப் பேச்சாற்றலும் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டே இருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையா மறைவு: மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். மதுரை ஞானஒளிவு புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக பேசுவதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார்.

சமூகத்திலும, ஒவ்வொருவரது வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கடல் கடந்தும் தமிழ் மொழியை வளர்த்தவர்.

பேச்சாற்றலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையா, சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

நெஞ்சு வலி காரணத்தால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

“தமிழர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர்” - சாலமன் பாப்பையாவுக்கு நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
“பட்டிமன்றங்களை அறிவுத் தளங்களாக மாற்றியவர்” - சாலமன் பாப்பையாவுக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in