

‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை
கோவை: பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பு மிகவும் வலுவாக உள்ளது என கோவையில் நடைபெற்ற ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூல் வெளியீட்டு விழாவில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பேசினார்.
கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் அரங்கில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூல் வெளியீட்டு விழா மற்றும் இந்திய ராணுவம் குறித்த இணையத் தொடர் தொடக்க விழா ஆகியவை இன்று (ஆக.10) நடைபெற்றது. இந்நிகழ்வில், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூலை வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து ‘ஃப்ரெம் ஜென் இசட் டூ ஏ சோல்ஜர்’ (From Gen Z to a Soldier) என்ற இணையத் தொடரின் முன்னோட்டமும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், அண்ணாமலை பேசியது:
“ஜென்ஸீ இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நூலை கட்டாயம் படிக்க வேண்டும். மேஜர் முகுந்த் மறைந்தாலும், ‘அமரன்’ திரைப்படம் மூலம் அவர் இன்று அனைத்து இடங்களிலும் சென்று சேர்ந்துள்ளார்.
மகனை இழந்த துயரத்திலும் வரதராஜன் போன்றவர்கள் காட்டும் மனவலிமை, வாழ்க்கைக்கு ஓர் இலக்கணமாக உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட தைரியமான முடிவுகள் மற்றும் பொக்ரான் அணுசக்தி சோதனை ஆகியவை இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை அதிகரித்தன.
ஒரு காலத்தில் பொருளாதார வலிமை குறைந்த நாடாக இருந்த இந்தியா, இன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ போன்ற நடவடிக்கைகளை உறுதியுடன் மேற்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாகிஸ்தானைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவுக்கு அருகில் பாகிஸ்தான் இருப்பது என்பது 25 பைசா நாணயத்துக்கு அருகில் 500 ரூபாய் நோட்டை வைப்பதற்கு ஒப்பானது.
நமது ராணுவம் எதிரிகளுக்கு ரூ.14,500 கோடி அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிரிகள் ஒரு அடி கை நீட்டினால், நாம் நான்கு அடி திருப்பிக் கொடுத்துள்ளோம்.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பாதுகாப்பு மிகவும் வலுவாக உள்ளது. இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி உலக நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது” என்று அவர் பேசினார்.
இவ்விழாவில் உயிரிழந்த மேஜர் முகுந்தனின் தந்தை வரதராஜன் மற்றும் முன்னாள் என்.எஸ்.ஜி. கமாண்டோ வீரர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.