

சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாய (என்.ஜி.டி) வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகியும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ரேவதி மணிவண்ணன் தவெகவில் இணைந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், தேசிய பசுமைத் தீர்ப்பாய (என்.ஜி.டி.) வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரேவதி மணிவண்ணன், தமிழக வெற்றிக் கழகத்தில், அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளரும், மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சருமான சி.டி.ஆர் நிர்மல் குமார் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வகையான முக்கிய வழக்குகளைக் கையாண்டு வரும் இவர், சட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலைதளங்களில் எளிய தமிழில் சட்ட விளக்கக் காணொளிகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, திரைப்படக் காட்சிகளை நிஜ வாழ்க்கைச் சட்டங்களுடன் ஒப்பிட்டு விளக்கும் இவரது முயற்சி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், பொது மக்களின் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
கட்சியில் இணைந்த பின்னர் ரேவதி மணிவண்ணன் கூறுகையில், “முதல்வர் விஜய்யின் ஆட்சித் திறனும், மக்களுக்கு நெருக்கமான நலத் திட்டங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. சட்டம் என்பது நீதிமன்றங்களுக்குள் மட்டுமே இருக்கக்கூடிய ஒன்றல்ல; அது ஒவ்வொரு மனிதரின் அன்றாட வாழ்க்கையோடும் தொடர்புடையது. மக்கள் தங்களது உரிமைகளையும், சட்டப் பாதுகாப்புகளையும், பிரச்சினைகளுக்கான சட்டரீதியான தீர்வுகளையும் அறிந்திருக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொண்டு வரும் சட்ட விழிப்புணர்வுப் பணியை, இனி தவெக வழியாகவும் மக்களிடம் விரிவாக எடுத்துச் செல்ல விரும்புகிறேன். உரிமைகள் தெரியாத காரணத்தால் யாருக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதே எனது இலக்கு” என்று தெரிவித்தார்.