“புதுச்சேரியில் ஆட்சிக்கு எதிராக அமைச்சர்களே சதி” - நாராயணசாமி

 நாராயணசாமி

நாராயணசாமி

Updated on: 
1 min read

புதுச்சேரி: “புதுச்சேரியில் ஆட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்த அமைச்சர்களே சதி செய்கிறார்கள்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய், அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். தீபாவளியன்று நடந்த கொலைகள் தொடர்பாக தமிழக அமைச்சர் ராஜ்மோகன் சொன்ன கருத்து தவறானதுதான். ஆனால், புதுச்சேரியில் என்ன நடக்கிறது என பாருங்கள். கொலைகள் இவ்வளவு நடந்தும் புதுச்சேரி முதல்வரோ அல்லது துறை அமைச்சரோ வாய் திறக்கவில்லை. ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் விரைவில் வருகிறது.

புதுச்சேரியில் காவல் துறை ஊழலில் மூழ்கிவிட்டது. சட்டம் - ஒழுங்கு மோசமாகி கொலை நகராகிவிட்டது. மக்கள் பயத்தில் உள்ளனர். நிர்வாகமே நடக்கவில்லை. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உயிரை கையில் பிடித்து நடமாடுகின்றனர். இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி புதுச்சேரியில் நடக்கிறது. மக்கள் நலத்திட்டங்கள் முடங்கி முதல்வர் செயல்படவில்லை.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு கெட்டப் பெயர் வர அமைச்சர்களே சதி வேலை செய்கிறார்கள். புதுச்சேரியில் அமைச்சர்கள் தூக்கத்தில் உள்ளனர். நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. நேரம் வரும்போது எந்த அமைச்சர்கள் சதி செய்கிறார்கள் என்பதை தெரிவிப்பேன். புதுச்சேரியில் ஆளுநர் - முதல்வர் இடையில் பனிப்போர் நடக்கிறது.

எந்த வேலையும் நடக்கவில்லை. கோப்புகள் தூங்குகிறது. இந்த ஆட்சி ஐந்து ஆண்டு நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம், ஸ்திரத்தன்மை இல்லாத நிலைதான்.

நாங்கள் கொள்கைக்காக ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக போராடினோம். என்டிஏ ஆட்சியாளர்கள் கொள்ளையடிக்க புதுச்சேரி ஆளுநரை எதிர்க்கிறார்கள். ஆனால், ஆளுநர் இடம் தரவில்லை. ஆளுநர் கொள்ளையடிக்க தடையாக இருக்கிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> நாராயணசாமி</p></div>
முக்கொம்பில் அமைச்சர் ஆனந்த் ஆய்வு: காவிரி கதவணை சீரமைப்புப் பணிகளை விரைந்து தொடங்க உத்தரவு

X