சட்டமன்றத்துக்குள் சாதி, மதங்களை கொண்டுவரக் கூடாது: நயினார் நாகேந்திரன் காட்டம்

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
1 min read

சென்னை: “சபாநாயகர் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்,” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவி என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலை வகிக்க வேண்டிய ஒரு மிக உன்னதமான அரசியல் சாசனப் பதவியாகும். ஆனால், தற்போதைய சபாநாயகர், தான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கண்ணியத்தை மறந்து, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக பகிரங்கமாக தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொள்வதோடு, தான் சார்ந்த மதத்தின் ஒரு பிரிவுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சபாநாயகர் இருக்கையில் அமர்ந்துகொண்டே வெளிப்படையாகக் கோரிக்கை விடுக்கிறார்.

இது முதல்வர் விஜய்க்கு கட்டளையிடுவது போலவே அமைந்திருக்கிறது. இந்த சட்டமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதற்கு முன்பு பல சபாநாயகர்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் தான் சார்ந்த மதத்தையோ அல்லது சாதியையோ முன்னிலைப்படுத்திப் பேசியது கிடையாது. ஆனால், தவெக அரசு அமைந்த முதல் நாளிலிருந்தே முதல்வர் விஜய் , இது சிறுபான்மையினருக்கான அரசு என்று முன்னிலைப்படுத்திப் பேசுகிறார்.

அமைச்சர் மரிய வில்சனோ கையில் ஜெபமாலையுடன் வந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அத்துடன் நில்லாமல், தான் ஒரு கிறிஸ்தவர் என்று சட்டசபையில் குறிப்பிடுவதோடு, தமிழ் மொழியை விடத் தனது மதமே உயர்ந்தது என்கிறார். சட்டமன்றத்தில் பைபிள் வசனங்களைக் குறிப்பிட்டுப் பேசி வருகிறார்.

அவர்களின் மத நம்பிக்கைகளைத் தவறு என்று கூறவில்லை. ஆனால், தங்களது தனிப்பட்ட நம்பிக்கைகளை சட்டமன்றத்திற்குள் பேசுவதும், செயல்படுத்துவதும் சட்டமன்றத்தின் மாண்பைக் குலைப்பதோடு, இந்த சட்டமன்றத்தையே ஒரு குறிப்பிட்ட மதம் நோக்கி நகர்த்துவது போல் உள்ளது.

இது நல்லதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, சபாநாயகர் பதவியில் இருப்பவர் இதைப் பற்றிப் பேசுவது முற்றிலும் தவறான விஷயமாகும். எனவே, இனியாவது சபாநாயகர் மற்றும் தவெகவின் அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட சாதி, மத விஷயங்களை சட்டமன்றத்திற்குள் கொண்டு வராமல், அதன் மாண்பைக் காக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்</p></div>
ஆர்எஸ்எஸ் பேரணியில் பங்கேற்றதால் கர்நாடகாவில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: மத்திய அமைச்சர் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in