“டிஜிபியை நியமிக்காத அரசு எப்படி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும்?” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
2 min read

மதுரை: “காவல்துறை டிஜிபியை நியமிக்காத அரசு எப்படி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கும் என்றும் தன்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யார் மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன்” எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 2-வது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் மார்ச் 1-ல் நடக்கிறது. பிரதமர் மோடி பங்கேற்கிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் மதுரை மண்டேலா நகரில் முகூர்த்தக்கால் நடும் விழா பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் இன்று (பிப்.16) நடைபெற்றது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக மூத்த நிர்வாகிகள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வருகிற சட்டப்பேரவைத் தேர்தல், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மற்றும் பிரதமர் மோடி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், டிடிவி.தினகரன், பாரிவேந்தர், திருமாறன் மற்றும் பல சமுதாய அமைப்புகள் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைகின்ற தேர்தலாக இருக்கும்.

மதுராந்தகத்தில் நடைபெற்றதை பொதுக்கூட்டம் என்று சொல்ல முடியாது, மாநாடு என்று சொல்லலாம். பிரதமர் வந்துசென்ற பிறகும்கூட பொதுமக்கள் வந்தது திமுகவுக்கு பேரிடியாக இருந்தது. தொடர்ந்து, ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று சொன்ன மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இதையும், பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என்பதை மக்களே தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர், “டிஜிபியை நியமிக்காத அரசு எப்படி சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியும். 33 லாக்-அப் மரணங்கள் நடைபெற்றுள்ளன. காலவலரே காவலரை பாலியல் சீண்டல் செய்கிறார்கள். டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றார்கள். ஆனால், பள்ளிகளில் கஞ்சா கிடைக்கிறது.

திமுகவின் 500-க்கும் மேற்பட்ட தேர்தல் அறிக்கையில் 70 தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சொல்கிறார். சகோதரி கனிமொழி, ராகுல் காந்தியை சமாதானம் செய்கிறார். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்குமா, இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.” என்றார்.

நடிகை மீதான விமர்சனம் பற்றிய கேள்விக்கு, “யாருடைய மனதையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தக் கூடாது என்று நினைப்பவன் நான். தவெகவுக்கு இருக்கும் கொள்கையை புத்தகம் போட்டு, அந்த கொள்கைக்கு மாறானது பாஜக என்று சொல்லலாம். பேப்பரில் மட்டும் எழுதி வைத்தால் எப்படி?. 41 பேர் இறந்து போனார்கள். அதற்கு தமிழக அரசும், விஜய்யும் தான் காரணம்.” என்றார்.

மேலும், “சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் யார் நல்ல முதல்வராக ஆட்சி செய்தார்கள். மக்களுக்காக தமிழக அரசு எந்த திட்டமும் செய்யவில்லை. அனைத்தையும் செய்தது மத்திய அரசு. இந்தியா உலகப் பொருளாதாரத்தில் 4-வது இடத்தில் உள்ளது. இந்தியா வல்லரசு நாட்டை நோக்கிச் செல்கிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்பட்டது மதுரை எம்.பி.க்கு தெரிந்திருக்காது. 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், 90 ஆயிரம் பேருக்கு தான் வேலை கொடுத்திருக்கிறார்கள்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 70 விமானங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பயணிப்பதை பொறுத்துதான் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய முடியும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்வதாக சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை. ஆனால், இபிஎஸ் அப்போதே மத்திய அமைச்சராக இருந்த நட்டாவிடம் பேசி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தார்.

தேர்தல் அறிக்கையில் இபிஎஸ் அறிவித்ததை திமுகவினர் காப்பி அடித்திருக்கிறார்கள். கோடைகால விடுமுறைக்கு கூடுதலாக 2000 கொடுத்தது எந்த முதல்வரும் செய்யாத சாதனை. மகளிர் உரிமைத் தொகையில் நாங்கள் வழக்கு தொடுப்பதற்கான முகாந்திரமே இல்லை.

திமுக மக்கள் வெறுக்கின்ற ஆட்சியாக உள்ளது. அதை சமாளிப்பதற்காக வழக்கு என்று பெயரில் ரூ.5000 கொடுக்கிறார்கள்.

இது ஒரு குடும்ப ஆட்சி. துணை முதல்வரை முதல்வர் ஆக்க வேண்டும் என நினைக்கிறார்கள். தேமுதிக கூட்டணியில் இணைவது குறித்து 1-ம் தேதி பார்ப்போம்.” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன் </p></div>
“உரிமைத் தொகைத் திட்டத்தால் மகளிர் மகிழ்ச்சி; முடக்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி!” - உதயநிதி ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in