

சாத்தூரில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன்.
போதைப்பொருள் விற்றவர்கள் எல்லோரும் தற்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
சாத்தூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: நாளை முதல் பிரசாரத்தை துவங்க இருக்கிறேன். பாஜக எம்எல்ஏ-வைத் தேர்ந்தெடுத்தால் தான் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்கும் என்று மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கூறவில்லை.
நமது முதல்வர் எப்பொழுதுமே வார்த்தை ஜாலங்களால் திரித்து சொல்லக்கூடியவர். மெட்ரோ திட்டத்திற்கு விரிவான தகவல் திட்ட அறிக்கை கேட்டபோது தமிழக அரசு தவறான திட்ட அறிக்கையை கொடுத்தது. சரியான திட்ட அறிக்கையை கூட வழங்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது.
கஞ்சா போதையில்தான் கவனத்தை செலுத்துகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்காக கவனம் செலுத்துவதில்லை. போதைப்பொருள் விற்றவர்கள் எல்லோரும் தற்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் சினிமா தயாரித்து கொண்டு இருக்கிறார்கள். துபாய்க்கு ஓடியவர்கள் தற்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் மூலம் சினிமா எடுக்கிறார்கள்.
சுதந்திர இந்தியாவில் யார் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். எல்லோருக்கும் உரிமை உள்ளது. எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான். மதிப்பிற்குரிய விஜய் கூட்டம் நடத்தும்போது சரியான முறையில் ஏற்பாடுகளை செய்யத் தெரிவில்லை. யார் வேட்பாளர், எந்த பகுதியில் கூட்டம் போடுகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடத்தில் அது ஒரு பிரச்சினை.
திமுகவை பொறுத்தவரை அடக்குமுறை ஆட்சி. “ம் என்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம்” இதுதான் திமுகவின் அடக்குமுறை. ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடும் என முதல்வர் நினைக்கிறார். அது நடக்காது. இந்தத் தேர்தல் ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிரான போர்க்களம்.
2006ம் ஆண்டு தேர்தலில் 96 இடங்களைப் பெற்று திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மைனாரிட்டி திமுக அரசு என்று சொல்லி வந்தார். அதற்குப்பின் தமிழகத்தில் அது போன்ற மைனாரிட்டி ஆட்சி அமையவில்லை. தமிழகத்தில் இந்த முறை தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. பெரும்பான்மையான இடங்களில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “திமுகவும் தவெகவும் எங்களுக்கு எதிராக களத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். மம்தா பானர்ஜி அர்த்தமில்லாத குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். உண்மையா என்பதை முதல்வர் ஸ்டாலினிடம் அவர் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.” என்றார்