டப்பா இன்ஜினா, ஒரிஜினல் இன்ஜினா? - நயினார் நாகேந்திரன் காட்டம்
யார் டப்பா இன்ஜின், எது ஒரிஜினல் இன்ஜின் என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரியும் என்று திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் காட்டமாக பதிலளித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நேற்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுக தான் இன்றைக்கும் தமிழகத்தை ஆளப்போகும் கட்சியாக உள்ளது.
அதேபோன்று பாஜகவை ஏளனமாக நினைக்காதீர்கள். நாட்டை ஆளப்போகும் கட்சியாக இது மாறும் என்று தொடக்கத்தில் வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் பேசினார். அதேபோன்று இன்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்த கட்சியாக பாஜக உள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தை சேகர்பாபு சந்தித்து பேசியதாக செய்திகள் வருகின்றன. ஒருவேளை திமுக அணிக்கு ஓபிஎஸ்சை இழுப்பதற்காகக் கூட இருக்கலாம் என நான் கருதுகிறேன். முடிவு என்ன என்று எனக்கு தெரியாது.
கூட்டணி குறித்து தேமுதிக நல்ல முடிவு எடுக்க வேண்டும். திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல, பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி. எல்லோரையும் அவமரியாதையுடன் நடத்தும் கட்சி திமுக. ஆ.ராசா பெண்களை எவ்வளவு கேவலமாக பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஓட்டு போட்டதால் திமுக ஆளுங்கட்சியானது. ஆனால் அவர்கள் தேர்தல் அறிக்கை எதையும் நிறைவேற்றவில்லை.
பழைய ஓய்வூதியம் கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் 5 ஆண்டு முடியும்போது போராட்டத்துக்கு தயாராக வந்தபோது, ஜூன் மாதம் தரப்போவதாக கூறியுள்ளார்கள். ஜூன் மாதம் திமுக இருக்கபோவதில்லை என்பது அவர்களுக்கு தெரியும். இது தான் திமுகவின் போலி முகம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகள் சேர்ந்துள்ளன. எங்கள் கூட்டணி வலிமையாக உள்ளது. தேர்தலில் எங்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பழனிசாமி முதல்வராக பதவியேற்பார். மேலும் சில கட்சிகள் எங்கள் அணிக்கு வரும் என்று பழனிசாமி சொல்லியிருக்கிறார். எங்கள் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
மாநில மற்றும் மத்திய அரசுகள் இணைந்து பணியாற்றினால் தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற அர்த்தத்தில் இரட்டை இன்ஜின் ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால் டப்பா இன்ஜின் என்று சொல்கின்றனர். தேர்தல் முடிந்த பிறகு யார் டப்பா இன்ஜின், எது ஒரிஜினல் இன்ஜின் என்பது தெரியும் என்றார்.
