

கே.வி.குப்பம் கிராம சபை கூட்டத்தில் பேசும் நயினார் நாகேந்திரன். படம் : வி.எம்.மணிநாதன்
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்’ என்ற பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வேலூர் வந்த அவர் கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் நேற்று மத்திய அரசு திட்டங்களால் பயனடைந்த மக்களை கிராம சபை கூட்டம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சந்தித்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தவெக எங்கள் பி-டீம் என ஒரு வதந்தியை பரப்புகிறார்கள். ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்வது போன்ற தத்துவத்தை கடைபிடிக்கிறது. அது திமுகவின் வாடிக்கை. செங்கோட்டையன் தவெகவுக்கு செல்லும் முன்பாக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து விட்டு தான் சென்றார். அப்படி என்றால் திமுகவின் பி-டீமாக தவெக இருக்கிறதா? என நீங்கள் தான் கேட்க வேண்டும்.
பாஜகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என உதயநிதி பேசியுள்ளார். ஆடு நனைகிறது என்பதற்காக யாரோ கவலைப்பட்ட மாதிரி இருக்கிறது. அதிமுகவும், திமுகவும் எதிர், எதிர்க்கட்சி. அதிமுகவை காப்பாற்றும் அவசியம் திமுகவுக்கு ஏன்? வந்தது. அதிமுகவுடன் பாஜக இன்றைக்கு நேற்று கூட்டணி வைக்கவில்லை. 1998-லேயே கூட்டணி வைத்தோம். எங்களை விமர்சித்த திமுக 1999-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தது. வேண்டும் என்றால் கூட்டணி வைப்பார்கள் வேண்டாம் என்றால் விமர்சிப்பார்கள்.
1967 முதல் திமுக என்றைக்காவது மக்கள் செல்வாக்கோடு தொடர்ந்து ஜெயித்துள்ளதா? கூட்டணியை கூட வைத்துதான் வெற்றி பெறுகிறார்கள். அன்புமணி ராமதாஸ் மீது சிபிஐ விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. 100 நாள் வேலை திட்டத்தை 125 நாளாக உயர்த்தவும், வாரா வாரம் ஊதியம் வழங்கப்படும் என்று சொன்ன பிறகும் ஒரு முதலமைச்சர் தைரியமாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை கூறி வருகிறார்.
ஆட்சிக்கு வந்தால் 150 நாள் வேலை கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால், 100 நாள் வேலை திட்டத்தில் பெண்களை வீட்டில் சொந்த வேலை செய்யத்தான் பயன்படுத்துகிறார்கள். அதை எல்லாம் கண்டுபிடித்து, குளறுபடிகளை களைந்து முழுமையாக எல்லா சம்பளமும் அவரவர் வீட்டுக்கு போகும் படியாக மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது’’ என்றார்.