“பாஜகவுக்கு திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை” - நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on: 
2 min read

திருநெல்வேலி: “தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை, காட்சிதான் நடக்கிறது. பாஜகவுக்கு திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திருநெல்வேலி டவுன் வ.உ.சி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம் என அமைச்சர் கூறியதை முதல்வரே தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு தனது துறை குறித்தே எதுவும் தெரியவில்லை. மின்சாரம் எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகிறது என்பதுகூட அவருக்கு தெரியாத நிலையில்தான் மின்சாரத் துறை இயங்கி வருகிறது.

மின்சாரத் துறை அமைச்சராக நான் இருந்தபோது மாநிலம் முழுவதும் உள்ள முதன்மை பொறியாளர்களை கொண்டு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தமிழகத்தின் தற்போதைய மின்சார தேவை, அடுத்த 5 ஆண்டுகளுக்கான தேவை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவற்றைக் கணக்கிட்டு கூடுதல் மின் உற்பத்திக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட மின் உற்பத்தி ஒப்பந்தங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் மின்தடை ஏற்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் மின்தடை ஏற்படுமா, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் டெல்லிக்குச் சென்றபோது சோனியா காந்தி அருகில் அமர்ந்திருந்தார். ராகுல் காந்தியும் அவரை அரவணைத்து அழைத்து சென்றார். அப்போதாவது அருகில் இருந்த கர்நாடக முதல்வரிடம் காவிரி நீர் திறப்பது குறித்து பேசியிருக்க வேண்டும். தண்ணீர் திறந்து விடுங்கள் அல்லது எங்களை விட்டுவிடுங்கள் என்றாவது கேட்டிருக்கலாம்.

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகத்தை 60 ஆயிரம் பிரதிகளை கொளுத்தியுள்ளனர். ஒன்றரை லட்சம் தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டது குறித்த ஒரு தகவல்கூட அந்தப் புத்தகத்தில் இடம்பெறவில்லை.

காவிரியில் தண்ணீர் திறக்காத விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தற்போதைய அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்றத்தையும் அணுகவில்லை. அமைச்சர்கள் பேச்சில் மட்டுமே அனைத்தையும் காட்டுகின்றனர். செயல்பாட்டில் எதையும் காட்டவில்லை.

தஞ்சை பகுதியில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் விவசாயிகள் சொத்துகளை விற்கும் நிலைக்கும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. தமிழகத்தில் ஆட்சி நடைபெறவில்லை, காட்சி மட்டுமே நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதால் எந்த சலசலப்பும் ஏற்படாது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றியே தீர வேண்டும். அங்கு நிச்சயம் தீபம் ஏற்றப்படும். சலசலப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் காவல் துறை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தமிழக அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தலின்போது அறிவித்த திட்டங்களை முதல்வர் நிறைவேற்றவில்லை. சொன்னதை செய்யாமல் சினிமா படப்பிடிப்பில் வருவதுபோல் பட்டுவேட்டி, பட்டுச்சட்டை அணிந்து மோதிரம் போட்டுக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே விஜய் தற்போது அறிவித்துள்ளார். அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்ததுபோல் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின்போது கட்சியினர் தவறு செய்தாலும் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தற்போது சட்டப் பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் செய்யும் தவறுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

2004 முதல் 2026 வரை நாடுமுழுதும் காங்கிரஸ் கட்சி எந்த இடத்திலும் இல்லாத போதிலும் தமிழகத்தில் திமுக காங்கிரஸை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் ஓர் இடத்தில்கூட வெற்றி பெற்றிருக்காது.

நக்சல்களை பிரதமர் ஒழித்து வருவதைப்போல் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் கட்சியை பாஜக ஒழித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தானாக காணாமல் போய்விடும். திமுகவின் நெஞ்சுக்கு நேராக காங்கிரஸ் குத்தவில்லை, முதுகுக்குப் பின்னால் குத்திவிட்டது. அந்தப் புண் இதுவரை ஆறவில்லை.

இத்தகையச் சூழலில் காங்கிரஸ் தலைவர்கள் அழைப்பு விடுத்த நிலையில் திமுக தலைவர் டெல்லிக்கு எப்படி செல்வார்? சென்றால் திமுக தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அது சரியானதாக இருக்குமா?

பாஜகவுக்கு திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமே இல்லை. பாஜக தனித்து போட்டியிட்டாலே காங்கிரஸ் காணாமல் போய்விடும். திமுகவுடன் கூட்டணி என எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக் கூடாது. திமுகவுடன் பாஜக அதிகாரப்பூர்வமாக எந்தக் கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>நயினார் நாகேந்திரன்</p></div>
“தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சதி” - துரை வைகோ

X