

விழுப்புரம்: ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை. ஏற்கெனவே திமுகவினர் சேர்த்து வைத்திருந்த கள்ள வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
எஸ்ஐஆர் பணியை எதிர்த்து திமுக பயப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும். இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவதில் என்ன தவறு இருக்கிறது என முதல்வரிடம் கேள்வி கேட்பதில்லை.
கொளத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது என்பது, 1 லட்சம் தவறான வாக்குகளால் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார் என்பது தெரிய வருகிறது.
திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி, களத்தில் யாரும் இல்லை என தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதற்கு ‘அய்யோ பாவம்’ என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.
இதுவரைக்கும் எந்தத் தேர்தலிலும் தம்பி (விஜய்) போட்டியிடவில்லை. தற்போது அண்ணன் (செங்கோட்டையன்) அங்கு சென்றுள்ளார். தவெகவில் நிறைய பேர் இணைவார்கள் என கூறும் செங்கோட்டையன் நிலை பாவம். வேறு வழி அவருக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.