

சென்னை: எங்கள் கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது தமிழத்தில் தேர்தல் கூட்டணி, போட்டியிடவுள்ள தொகுதிகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்று பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக புதிய தேசிய தலைவராக இளம் வயதான, துடிப்பான ஒருவரை தேர்வு செய்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சரித்தர சாதனையை புரிந்துள்ளனர். பாஜக தலைவராக இருந்த நட்டா சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு மாநிலங்களில் வெற்றியை பெற்றுக்கொடுத் தார். நட்டா மற்றும் நிதின் இருவருக்கும் எனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.
அமித் ஷாவை தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தேன். தமிழகத்தில் நான் மேற்கொள்ளும் யாத்திரை ஜன. 9-ம் தேதியுடன் முடிகிறது. அதன் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அல்லது அமித் ஷா இருவரில் யாராவது ஒருவர் நிச்சயம் கலந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளது. இதற்காக இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை நான் அமித் ஷாவிடம் கொடுத்ததாக கூறுவது தவறானது. இன்னும் தேர்தலுக்கு 3 மாதங்கள் இருப்பதால், பல்வேறு மாற்றங்கள் வரலாம். ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி என்பது உறுதியானது.
இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் புதிய கட்சிகளோ சுயேச்சைகளோ வெற்றி பெற்றதாகவோ பெரிய அளவிலான வரலாறு இல்லை. எத்தனை முனைப் போட்டி வந்தாலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.