சென்னை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 50 நாட்களில் மட்டும் 153 பாலியல் வன்கொடுமை சம்பவங்களும், 75 படுகொலைகளும் நடந்துள்ளன.
தமிழகத்தை போதைப் பொருட்களில் இருந்து மீட்கவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனாம் சொத்துகள் தொடர்பாக 1947-ல் தொடரப்பட்ட வழக்கில், 1968-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இனாம் சொத்துகள் கோயில்களில் பணிபுரிபவர்களுக்கும், சேவை செய்பவர்களுக்கும் மட்டுமே உரியது.
ரயத்துவாரி பட்டா கொடுத்திருந்தாலும், அதை வேறு யாருக்கும் மாற்ற சட்டத்தில் இடமில்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருப்பவர்களுக்கு உரிமை கொடுப்பது தவறில்லை, அதேநேரம், கோயிலுக்கான வரி வருவாய் பாதிக்கப்படக்கூடாது.
எனவே, அந்த நிலங்களுக்குப்பட்டா கோருவதற்கோ அல்லது உரிமை கொண்டாடுவதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை. பழநி மலை அடிவாரத்தில் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 44 சென்ட் கோயில் நிலத்தை, ஜூலை 6-ம் தேதி முறைகேடாக தனியார் பெயரில் பட்டா போட்டு கொடுத்துள்ளனர்.
அந்த குறிப்பிட்ட சார்-பதிவாளர் விடுமுறையில் சென்றதும், அவருக்குப் பதிலாக வேறொருவர் வந்து நிலத்தைப் பதிவு செய்ததும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.
அந்த சார்-பதிவாளர் ஏன் திடீரென விடுமுறையில் சென்றார் என்பதை அறநிலையத்துறை அமைச்சர் விளக்க வேண்டும் கோயில் இடங்களைத் தனியாருக்குக்கொடுக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளன என்றார்.