திமுக ஆட்சி நிர்வாகம் ‘ஆல் ஃபெயில்’ ஏன்? - நயினார் நாகேந்திரன் ‘ரிப்போர்ட்’

திமுக ஆட்சி நிர்வாகம் ‘ஆல் ஃபெயில்’ ஏன்? - நயினார் நாகேந்திரன் ‘ரிப்போர்ட்’
Updated on
1 min read

சென்னை: “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், ஆட்சி நிர்வாகம் குறித்து தேர்வு ஒன்று நடத்தியுள்ளோம். அதில் திமுக அரசு எல்லாவற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பதை ‘ஆல் ஃபெயில்’ என ரிப்போர்ட் தயாரித்துள்ளோம்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டபேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பதில் அளித்துப் பேசினர். இதை பாஜக புறக்கணித்தது. மேலும், திமுக அளித்த வாக்குறுதிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மதிப்பெண் அட்டையை தயாரித்து அதற்கு ‘ஆல் ஃபெயில்’ என தலைப்பிட்டு அதை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறும்போது, “எதிர்காலத்தில் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால், எதிர்கால அறிவிப்புகள் எதுவும் இல்லாமல், திமுக அமைச்சர்கள் அரைத்த மாவையே அரைத்துள்ளனர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், ஆட்சி நிர்வாகம் குறித்து தேர்வு ஒன்று நடத்தியுள்ளோம், அதில் திமுக அரசு எல்லாவற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்பதை ‘ஆல் ஃபெயில்’ என ரிப்போர்ட் தயாரித்துள்ளோம்.

சட்டப்பேரவையை ஒரு விளம்பரப் பலகையாக மட்டுமே திமுக அரசு பயன்படுத்தியுள்ளது. தேர்தலுக்காக அரசு இயந்திரத்தையும், அரசு பணத்தையும், சட்டப்பேரவையும் தவறாக பயன்படுத்துகின்றனர் என்கிற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைக்கிறேன்” என்று அவர் கூறினார்.

இதனிடையே, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துறைவாரியாக தேர்தல் வாக்குறுதிகள் அதில் நிறைவேற்றப்பட்டவை, நிறைவேற்றபடாதவை, அதற்கான மதிப்பெண் மற்றும் தோல்வி, சராசரி என இருவகையான முடிவுகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் விலைவாசி, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், மத நல்லிணக்கம், சமூக நீதி ஆகியவற்றுக்கு தவறு என குறியிட்டு, ஊழல் என்பதற்கு மட்டும் சரி என டிக் அடித்து 10-க்கு 1 மதிப்பெண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in