திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கிராம மக்கள் சந்திப்பு கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். | படம்: ர. செல்வமுத்துகுமார் |
கூட்டணியை ஸ்டாலின் இறுக்கிப் பிடிப்பது ஏன்? - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
திருச்சி/ கரூர்: உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை இறுக்கி பிடித்து வைத்திருக்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் எட்டரை கிராமத்தில் பாஜக சார்பில் கிராம மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளாக எதையும் கண்டுகொள்வதில்லை. தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்டுமென்பது மட்டுமே அவரது ஒரே நோக்கம்.
அதற்காகத்தான் அவர் கூட்டணியை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார். அதில் எந்த அளவு வெற்றி பெறப் போகிறார் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். உரத்தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்துவிட்டது. இதில், மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழக அரசு தரமான விதைகளை உருவாக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆறுகளின் குறுக்கே ஆயிரம் தடுப்பணை கட்டப்படும் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அவர் ஒரு தடுப்பணை கூட கட்டியதாக தெரியவில்லை.
இனி அவர்கள் கட்டுவதற்கும் வாய்ப்பில்லை. பிரதமர் மோடி ஆதரவில், பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு ஆறுகளில் தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டி நீராதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்பகுதியில் உள்ள மக்களை சந்தித்தபோது, ‘இங்கு அதிகளவில் பூ சாகுபடி செய்யப்படுவதால், சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். வாழைக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
காவிரியில் போதிய அளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும். போதாவூர் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் சென்ட் தொழிற்சாலை உட்பட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, பாஜக மாநில இணைப் பொருளாளர் சிவசுப்பிரமணியன், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் மு.பரஞ்சோதி, பாஜக மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டி முத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ரூ.50,000 கோடி ஊழல் பணம்: கரூர் 80 அடி சாலையில் நேற்றிரவு நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது: அரவக்குறிச்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் கொண்டு வர எந்த திட்டமும் இல்லை. ஆனால் டாஸ்மாக் மது மட்டும் தாராளமாக கிடைக்கிறது. வரும் தேர்தலில் திமுகவினர் வாக்குக்கு ரூ.5,000, 1 கிராம் தங்கம் வழங்க தயாராக உள்ளனர்.
அவ்வளவு பணம் உள்ளது. ரூ.50,000 கோடி ஊழல் பணம் நடமாடிக்கொண்டு உள்ளது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ரூ.50 கோடி பதுக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் தேர்தலில் நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டும் என்றார். கூட்டத்தில், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
