“சட்டப்பேரவையில் அப்பாவை தேடுகிறார்; வீட்டில் அம்மாவிடம் கேட்டால் அப்பா யார் என்று தெரியும்” - நயினார் சர்ச்சை பேச்சு

 நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன்

Updated on
2 min read

சென்னை: ‘சட்டப்பேரவையில் அப்பாவை தேடுகிறார்; வீட்டில் அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யார் என்று தெரியும்’ என நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘ஒரே நாடு' மாத இதழ் மற்றும் டிஜிட்டல் பதிப்பை தொடங்கி வைத்து, இதழை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: கவிதைகளில் புதுக்கவிதை, பழைய கவிதை எனப் பல உண்டு.

நான் கல்லூரியில் படிக்கும் போது படித்த ஒரு கவிதை இப்போதும் என் நினைவுக்கு வருகிறது. “செத்த மாட்டுத் தோலினால் பறை செய்யலாம்... செருப்பு செய்யலாம்... ஆடை நெய்யலாம்... ஆனால், செத்த மனிதன் தோலினால் என்ன செய்ய முடியும்?” இன்றைக்கு அப்படிப்பட்ட மனிதர்கள் ஆட்சி செய்யக்கூடிய சூழல் இங்கே நிலவுகிறது.

இவர்களால் இந்த நாட்டுக்கு என்ன பயன்? சட்டப்பேரவைக்கு சென்று, ‘அப்பா எங்கே? அப்பா எங்கே?' என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால்தான் அப்பா யாரென்று சொல்லுவார். ஆனால், இவர்கள் சட்டப்பேரவைக்கு வந்து அப்பாவைத் தேடினால் யாருக்குத் தெரியும்?

பாஜகவினர் சோர்ந்து விட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால்,பிரிந்து சென்ற கல்யாண் சிங் போன்ற தலைவர்கள் மீண்டும் கட்சிக்குத் திரும்பியதுதான் வரலாறு. அந்த வரலாறு தமிழகத்திலும் திரும்பும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையும் காலம் கனிந்துவிட்டது.

எவன் ஒருவன் தன் தாய் மீது உண்மையான பற்று வைத்திருக்கிறானோ, அவனால் மட்டுமே தன் தாய்நாட்டின் மீதும் பற்று வைக்க முடியும். அதேபோல், தன் தாய் மீது பற்றுள்ளவனே தன் தாய்மொழியை நேசிப்பான். எனவே, தாய், தமிழ், தாய்நாடு, தேசம் ஆகியவற்றை நாம் பிரித்துப் பார்க்க முடியாது.

தமிழையும் தேசியத்தையும் பாஜக ஒரு போதும் பிரித்துப் பார்க்காது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தவெக ஆதரவாளர் ஒருவர், சமூக வலைதளங்களில் தமிழ் கடவுள் முருகனையும், இந்துமத நம்பிக்கைகளையும் இழிவுப்படுத்தி வருவது கடும் கண்டனத்துக்குரியது. அவரை கைது செய்ய வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்கு விளக்கம்: நயினார் நாகேந்திரனின் பேச்சு சர்ச்சையாகியுள்ள நிலையில் அவர் அளித்துள்ள விளக்கத்தில், ‘‘ஒரே நாடு 2.0 பத்திரிக்கை வெளியீட்டு விழாவின் போது நான் பேசியதை திரித்து சித்தரித்து, அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்தவிதமான உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. தாய் மீதும், தாய் நாட்டின் மீதும், தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்’’ என குறிப்பிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p> நயினார் நாகேந்திரன்</p></div>
தமிழ்க்கடவுள் முருகன் குறித்து அவதூறாக பதிவிட்ட கோவை இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in