

நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்
திமுக-காரன் என்ற போர்வையில் உடன்பிறப்புகள் செய்யும் அராஜகங்கள் அளவின்றி தொடர்வது கடும் கண்டனத்துக்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே, அதிவேகமாகச் சென்ற திமுக கொடி கட்டிய கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி நெஞ்சை கனக்கச் செய்கிறது. திமுக குண்டர்களின் அட்டூழியத்துக்கு ஒரே நேரத்தில் இரு உயிர்களைப் பலிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அக்குடும்பத்தாரை என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை.
திமுக-காரன் என்ற போர்வையில் உடன்பிறப்புகள் செய்யும் அராஜகங்கள் அளவின்றி தொடர்வது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமன்றி பெரும் ஆபத்தானதும் கூட. ஆட்சி முடிய இன்னும் ஒருசில வாரங்களே உள்ள நிலையில், அதிகார மமதையில் திமுக-வினர் இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்குவார்களோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு நாளையும் தமிழக மக்கள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தனை அகலமான தார் சாலையில், ஓரமாகச் சென்று கொண்டிருந்தவர்களின் மீது காரை மோதுமளவுக்குத் திமுக-வினருக்குத் துணிச்சலும் அலட்சியமும் மிகுந்துள்ளது அருவருப்பானது. பல கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணையும், இன்னும் ஒருசில நாட்களில் பூமியின் ஸ்பரிசத்தை உணரவிருந்த இளம் சிசுவையும் ஒரேநேரத்தில் கருவறுத்துக் காவு வாங்கிய திமுக-வினரை மனிதாபிமானம் மிக்க தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.