நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார்

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார்
Updated on
1 min read

சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன் விஜய் பற்றியும் த்ரிஷா பற்றியும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

த்ரிஷா கண்டனம்: இந்நிலையில் நடிகை த்ரிஷாவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் அவரது வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், இதுபோன்ற அருவருப்பான, பொருத்தமற்ற கருத்தைத் தெரிவிப்பார் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

அவர் (த்ரிஷா) எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. அவரை தொழில்ரீதியாக பேச வேண்டுமே தவிர அரசியல்ரீதியாக குறிப்பிடத் தேவையில்லை. குறிப்பாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை, விவாதத்துக்கு உட்படுத்த வேண்டாம். உயர் பொறுப்பில் இருப்பவர்கள், பொறுப்பை உணர்ந்துசெயல்பட வேண்டும். அவருக்கு தொடர்பில்லாத இதுபோன்ற விஷயங்களில் அவர் பெயரைக் குறிப்பிட வேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.

நயினார் வருத்தம்: நடிகை த்ரிஷாவின் வழக்கறிஞர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: என்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், நான் ஒருபோதும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. அத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதும் இல்லை, இதுவரை நான் அவ்வாறு பேசியதும் இல்லை. அன்று ஒரு குறிப்பிட்ட சூழலில் தற்செயலாக வாய் தவறி ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது தவறான ஒரு வார்த்தைதான் என்பதை உணர்கிறேன்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசனும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டறிந்தனர். இந்த விவகாரத்தில் யாராவது மன வருத்தம் அடைந்திருந்தால், அல்லது யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக என்னுடைய மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

தே.ஜ.கூட்டணியில் தேமுதிக? - முன்னதாக, மதுரையில் பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி கலந்து கொள்ளும் தே.ஜ.கூட்டணி பிரச்சாரக் கூட்டத்துக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணியில் தேமுதிக இணையுமா என்பது மார்ச் 1-ல் தெரியும்’’ என்றார்.

நடிகை த்ரிஷா குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் நயினார்
சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in