சென்னை: திமுக அரசு பல்கலைக்கழகங்களை திவாலாக்குகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவு: ஓய்வூதியம் வழங்க போதிய நிதியில்லாததால், கார்பஸ் ஃபண்ட்டில் இருந்து ரூ.95 கோடியை சென்னை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
பெருமை வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகம் நிதி இல்லாமல் முடங்கியிருக்கிறது. இந்நிலையில், அவசரகால நெருக்கடியைச் சமாளிக்கவும், நிதி நிலையை வலுப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ள கார்பஸ் ஃபண்டின் வட்டியைப் பயன் படுத்தி ஓய்வூதியம் வழங்காமல், மூலதனத்தையே செலவழித்து ஓய்வூதியம் வழங்கியுள்ளது.
அதனிடம் அடிப்படை செலவுகளுக்குக்கூட வேறு எந்த நிதியுமே இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் சம்பள, ஓய்வூதிய பாக்கிக்காக பேராசிரியர்கள் போராடுவதும், பணம் இல்லை என்று பல்கலைக்கழகங்கள் கைவிரிப்பதும் தொடர்கிறது.
உயர்கல்வி நிலையங்களின் அடிப்படைச் செயல்பாட்டுக்குத் தேவையான நிதியைக்கூட அளிக்காமல், பல கோடி செலவளித்து "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" என்று விளம்பர விழாக்களை திமுக அரசு நடத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.