டெல்லிக்கு 14-ம் தேதி செல்லும் நிலையில் பழனிசாமியுடன் நயினார் ஆலோசனை

டெல்லிக்கு 14-ம் தேதி செல்லும் நிலையில் பழனிசாமியுடன் நயினார் ஆலோசனை
Updated on
2 min read

2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணிக்கு பழனிசாமி தலைமை வகிக்கிறார். இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரக்கூடிய வாக்குகளை பாதிக்கும் என்பதால், அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.

ஓபிஎஸ் தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறி கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து, டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகினார். அவர்களை மீண்டும் கூட்டணியில் இழுக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையனை போல், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தவெக பக்கம் சாய்ந்துவிட கூடாது என எண்ணிய பாஜக, இருவரையும் கூட்டணிக்குள் இழுக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெல்லியில் முகாமிட்டிருந்த ஓபிஎஸ், அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, கூட்டணியில் இணைவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதேசமயம், தனிக்கட்சி என பேசி வந்த ஓபிஎஸ், அமித் ஷா சந்திப்புக்கு பிறகு, தனிக் கட்சியெல்லாம் இல்லை என பேசினார். ஓபிஎஸ் சந்திப்பை தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இரண்டு முறை டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, கூட்டணி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம் குறித்து பேசியதாக தெரிகிறது. மேலும், விரைவில் அமித் ஷா தமிழகம் வர இருப்பதால், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தயார் நிலையில் இருக்கவும், அமித் ஷா வருகையின் போது அதிகாரப்பூர்வமாக கூட்டணி அறிவிப்பை வெளியிடவும் பாஜக திட்டமிட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்றது. இந்த பொதுக்

குழு கூட்டத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு மட்டுமே என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்க்கப்படுவார்களா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்கிறார். அப்போது கூட்டணி தொடர்பாக பேச உள்ளார். மேலும், அமித் ஷாவின் தமிழகம் வருகை தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளார்.

இதற்கிடையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இல்லத்தில், அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குவதால், கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை அதிமுக பார்த்துக் கொள்ளும் என்றும், பாஜக உடன் இருந்தால் மட்டும் போதும் என பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்தவகையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது பழனிசாமியின் கையில் தான் இருக்கிறது என பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பழனிசாமியை சந்தித்து விட்டு வெளியே வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணிக்குள் கொண்டு வருவதை பற்றியோ, தொகுதி பங்கீடு பற்றியோ எதையும் பேசவில்லை.

அதிமுக பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றதற்கு வாழ்த்து தெரித்தேன். பொதுக்குழுவில் நடந்த விவரங்கள் குறித்து பேசினேன்’, என்றார். மேலும், பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என்ற கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு, எதுவும் கருத்து கூறாமல் சென்றுவிட்டார்.

டெல்லிக்கு 14-ம் தேதி செல்லும் நிலையில் பழனிசாமியுடன் நயினார் ஆலோசனை
விஜய்யை முதல்வராக ஏற்போருடன் கூட்டணி: தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in