

நயினார்
சென்னை: “அவையின் மூத்த உறுப்பினர் என்ற மரியாதை துளியும் இன்றி, போஜராஜன் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வைத்த தரம் தாழ்ந்த விமர்சனம் உங்கள், அரசியல் வளர்ப்புக்கான உதாரணம். குறுகிய காலத்துக்குள்பல கட்சி தாவியதால் வந்த பழக்கம் போல” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில், “நாடாளுமன்றத்தில் இன்னமும் முன்மொழியப்படாத தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக அவசர அவசரமாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவதே, ஒரு மடைமாற்று அரசியல்தான். இதில், அந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து விட்டார் என்பதற்காக, எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜனை “ஒற்றைப் பிரதிநிதித்துவம்” என்று நீங்கள் கேலி பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.
அவையின் மூத்த உறுப்பினர் என்ற மரியாதை துளியும் இன்றி, போஜராஜன் மீது நீங்கள் வைத்த தரம் தாழ்ந்த விமர்சனம் உங்கள், அரசியல் வளர்ப்பிற்கான உதாரணம். குறுகிய காலத்திற்குள் பல கட்சி தாவியதால் வந்த பழக்கம் போல.
“வாய் புளித்ததோ, மா புளித்ததோ” என்று எதையாவது பேசாமல், முதலில் அவை ஒழுக்கத்தையும், அரசியல் நடப்புகளையும் முறையாகக் கற்றுக் கொண்டு, பின்பு சட்டமன்றத்திற்கு வாருங்கள்.
காரணம், தமிழக மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-இல் இருந்து 59 ஆக அதிகரிக்கும் தொகுதி மறுவரையறையினால், தமிழகத்தின் எம்பிக்கள் குறைந்து விடுவார்கள் என்று நீங்கள் கூறுவது, உங்கள் அறியாமையின் வெளிப்பாடு தான். அதிலும், உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் தமிழகத்தின் குரல் ஒலிக்காது என்று கூறும் உங்கள் அறியாமையை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.23% ஆக அதிகரித்து 59 மக்களவை உறுப்பினர்கள் இருக்கும் போது, முன்பை விட எளிதாக தமிழக மக்களின் கருத்துகளை எதிரொலிக்க முடியும் என்ற அடிப்படை கூட ஓர் அமைச்சருக்கு புரியவில்லை என்பது வருத்தமானது தான்.
தங்களது 20 நிமிடப் பேச்சில் போகிற போக்கில் இந்தி பேசும் மாநிலங்களுக்கு தான் பலன், மக்கள் தொகை அதிகமுள்ள மாநிலங்களுக்கு மட்டுமே பலன் என வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிச் சென்றிருக்கிறீர்கள். நமது மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுவரையறையின் படி மக்கள் தொகை எவ்வளவு இருந்தாலும், எந்த மொழி பேசினாலும், அனைவருக்கும் 50% உயர்வு கிடைப்பதால் யாருக்கும் பாதகமில்லை.
4 மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் தொகுதிகளையும், ஒரு மாநிலத்தைவிட அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட தொகுதிகளையும் தற்போது நமது மக்களவை உறுப்பினர்கள் சமாளித்து வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை மூலம் இத்தகைய குறைகளை களைந்து, தமிழக மக்களின் பிரச்சனைகள் எளிதாக சீர் செய்யப்படும். ஆனால் அதே வேளையில், தங்களது Freeze delimitation கொள்கையானது தமிழக மக்களின் குரலை ஒட்டுமொத்தமாக முடக்கிவிடுவதற்கு தான் வழிவகுக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை” என்று அவர் தெரிவித்துள்ளார்.