

மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு தெரிவித்த கிராம பெண்கள்.
நாகப்பட்டினம்: மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை காக்கவும், பொது அமைதியைப் பேணவும் காவல்துறை உள்ளிட்டதுறைகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் மது விற்பனையும், மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகேஉள்ள விழுந்தமாவடி மீனவ கிராமம் மதுவைக் கட்டுப்படுத்த முன்மாதிரியான அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. அதன்படி, கிராமத்தின் சுகாதாரம் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மது அருந்தக் கூடாது என்று வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
மேலும் திருமணமானவர்கள் குடித்துவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்வதாக புகார் வந்தால், அவர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மது அருந்துபவர்கள் குறித்து ஊர் தலைவர்களிடம் ஆதாரம் தரும் நபர்களுக்கு ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
‘மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்!’ என்ற முழக்கத்துடன் ஊர் பஞ்சாயத்து சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பேனர் தற்போது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இக்கட்டுப்பாடுகள் 10 நாள்களுக்கு முன்பே நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால் தற்போது கிராமத்தில் எவ்வித தகராறும் இன்றி அமைதி நிலவுவதாக ஊர் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். நாகை மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியோர் தரப்பிலும், சமூக ஆர்வலர்களும் இக்கிராமத்தின் முயற்சியை தமிழகத்துக்கே முன்மாதிரியான நடவடிக்கை என பாராட்டியுள்ளனர்.