

திருவாருர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு கடந்த 10 நாடகளாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் தலைமையில் கவுன்சிலர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குடிநீர், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு விநியோகம் செய்யப்படவில்லை.
இதனை கண்டித்து, முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ் கான் தலைமையில், துணைத் தலைவர் சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சந்தித்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், “விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.