

திருவாரூர்: “ஆற்று படுகைகளில் ஆடு, மாடுகள் மேயும். அப்போது இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கமுள்ள கரையை பார்க்கும் போது பசுமையாக தெரியும். முதலில் ஒரு ஆடு செல்லும். பின்னர் ஒரு மந்தையே காலியாகி அந்தப் பக்கம் சென்றுவிடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக, காய்ந்து போய் கிடக்கும்” என தற்போதைய கூட்டணி நிலைமை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் பேசிய முத்தரசன், “முன்னாள் அமைச்சர் மதிவாணன் மிகுந்த கொள்கைப் பற்று மிக்கவர். கொள்கைப் பற்று தான் முக்கியம்.
ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேயும். அப்போது இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்க கரையை பார்க்கும் போது பசுமையாக தெரியும், இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்லுவார்கள், முதலில் ஒரு ஆடு செல்லும். அதனைத் தொடர்ந்து ஒரு மாடு, பின்னர் ஒரு மந்தையே காலியாகி அந்தப் பக்கம் சென்று விடும். அங்கே போனால் நிலைமை இதைவிட மோசமாக இருக்கும்.
இங்கேயாவது கொஞ்சம் பச்சை தெரியும் அங்கு ஒன்றுமே இருக்காது. காய்ந்து போய் கிடக்கும். ஏதோ வந்து விட்டோம், உடனே திரும்பி விட்டால், அந்தப் பகுதி நம்மை ஏற்றுக் கொள்ளுமா ஏற்றுக் கொள்ளாதா? என தெரியாது. இரண்டு நாள் இருந்துவிட்டாவது சென்று விடுவோம் என்று, இப்படியான ஒரு சூழல் உள்ளது. இதனை யாரையும் குறிப்பிட்டு நான் சொல்லவில்லை. பொதுவாகச் சொல்கிறேன்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலினை திருவாரூர் இல்லத்தில் சந்தித்து விட்டு வெளியே வந்த போது நாகை மாவட்ட திமுக செயலாளர் கவுதமன், என்னை வழக்கமாக அப்பா என கூப்பிடுவதை தவிர்த்துவிட்டு அண்ணன் என்று அழைத்தார். ஏன் என்னை அப்பா என்று கூப்பிடுவதை மாற்றி கூப்பிடுகிறீர்கள் எனக் கேட்ட போது நீங்கள் தான் மாறிவிட்டீர்களே என்று கூட்டணி மாறியதைப் பற்றி தெரிவித்தார்.
யாரையும் யாரும் காணாமல் அடித்து விட முடியாது. பைத்தியக்காரத் தனமாக காணோம் என்கிறார். எதை காணோம். நான் நீண்ட நாட்களாக ஸ்டாலினை பார்க்கவில்லை. நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள். தேர்தலுக்குப் பிறகு நான் பார்க்கவில்லை. எப்படி இருக்கிறாரோ? சங்கடமாக இருப்பாரா என்று யோசனை செய்து கொண்டு சென்றேன். முன்பு பார்த்த அதே போல ஸ்டாலின் வழக்கமான உபசரிப்பை செய்தார், இந்த உரையாடல் தொடரும்.
சென்ற ஆண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு அமோகமாக சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு தண்ணீர் இல்லை, அணையும் திறக்கவில்லை. ஒரு போக சாகுபடியாவது நடைபெறுமா?. ஏற்கனவே நான்கு அணைகள் கட்டிய கர்நாடகா, மேலும் ஒரு அணை கட்டப் போகிறேன் என்கிறார்கள். இதனை தடுப்பதற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. டெல்டா பகுதியில் ஒரு போக சாகுபடி நடைபெறுமா என்ற அச்சம், கவலை உள்ளது” என்றார்.