

சென்னை: காஞ்சி மஹா பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த முல்லைவாசல் டாக்டர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் நேற்று மகாஸ்வாமியின் திருவடிகளை அடைந்தார். அவருக்கு வயது 81.
மஹாமஹோபாத்யாய, வேத பாஷ்ய பிதாமஹர், சாஸ்த்ர ரத்னாகர, ப்ரம்ம முல்லைவாசல் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் தனது தந்தையார் பிரம்ம ராஜகோபால கனபாடிகளின் வழிகாட்டுதலின்கீழ் ‘வேத அத்யயனம்’ பயின்றவர்.
எஸ்.ஆர்.கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகள், போலகம் ராம சாஸ்திரிகள் போன்ற சிறந்த அறிஞர்களிடம் ‘மீமாம்சை’, ‘வேதாந்த சாஸ்திரம்’ ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.
மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து முதல்வராகப் பணி ஓய்வு பெற்றார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘இஷ்ட சித்தி விவரணம்’ (Ishta Siddhi Vivaranam) என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி ஓய்வுக்குப் பிறகு, ‘பிரம்ம வித்யா பவனம்’ என்ற பெயரில் பாரம்பரிய முறையில் வேதாந்தக் கல்வியை வழங்கும் ஒரு பள்ளியை நிறுவினார். ‘முல்லைவாசல் ஹெரிடேஜ் டிரஸ்ட்’ (Mullaivasal Heritage Trust) அமைப்பின் நிர்வாக அறங்காவலராகவும் இருந்தார்.
வேதங்கள், உபநிடதங்கள், யோகா, வானியல், தத்துவ மரபுகள் உள்ளிட்டவற்றில் உள்ள சிறப்பம்சங்களைக் கண்டறிதல், பாதுகாத்தல், பரப்புதல், நூல்களை வெளியிடுதல் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
தனது அசாத்திய வேத மற்றும் சாஸ்திர ஞானத்துக்காக மகா பெரியவாளிடம் இருந்து ‘வேத பாஷ்ய ரத்னம்’ என்ற பட்டத்தையும், ‘அத்வைத சித்தி ரத்னாகரா’, ‘வேதாந்த விபூஷணம்’ உள்ளிட்ட பல்வேறு உயரிய கவுரவங்களையும் பெற்றுள்ளார்.
முல்லைவாசல் டாக்டர். ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் சென்னை மயிலாப்பூரில் உள்ள தமது வேத வித்யா பவனத்தில், நேற்று காலை நித்ய அனுஷ்டானங்கள், மஹாளய தர்ப்பணம் முதலியவற்றை முறையாக அனுஷ்டித்து, நாற்காலியில் அமர்ந்தபடி மகா பெரியவாளின் திருவடிகளை அடைந்தார்.
அவரைப் பற்றி நினைவுகூர்ந்த வேதவிற்பன்னர் டாக்டர் மணி டிராவிட் சாஸ்திரிகள், “பிரபல வேத விற்பன்னரும், சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான முல்லைவாசல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளின் மறைவு ஆன்மிக மற்றும் கல்வி உலகுக்கு பேரிழப்பாகும். அவருடைய அதி அற்புதமான உபன்யாஸங்கள், மாணவர்களை நல்வழியில், வேதநெறியில் வழிநடத்தின” என்றார்.