கொளத்தூரில் 246 மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்ட பணியை முடித்த ‘முல்லை’ இயந்திரம்!

கொளத்தூரில் 246 மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்ட பணியை முடித்த ‘முல்லை’ இயந்திரம்!
Updated on
2 min read

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 5-வது வழித்தடத்தில் கொளத்தூர் சாய்வு தளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை கீழ் பாதையில் 246 மீட்டர் தொலைவுக்கு ‘முல்லை’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதற்கிடையே, கொளத்தூர் நிலையம் - ஸ்ரீனிவாசா நகர் வரை 1,060 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை ‘குறிஞ்சி’ இயந்திரம் தொடங்கியது.

சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப் படுகிறது. இவற்றில், மாதவரம் - சோழிங்க நல்லூர் வரையிலான 5-வது வழித்தடம் முக்கியமானதாகும். 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இத்தடத்தில் அமைக்கப்படுகின்றன.

இத்தடத்தில் சுரங்கப் பாதை பணிக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலங்களின் பெயர்களைக் கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கொளத்தூர் சாய்வுதளத்தில் இருந்து கொளத்தூர் நிலையம் வரை 247 மீட்டர் நீளத்துக்கு குறிஞ்சி என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த பிப்.18-ம் தேதி தொடங்கி ஆகஸ்டில் நிறைவடைந்தது.

அதைத்தொடர்ந்து, கொளத்தூர் சாய்வு தளத்தில் இருந்து கொளத்தூர் நிலையம் வரை 246 மீட்டருக்கு கீழ்பாதை (இரண்டாவது பாதை) அமைக்கும் பணியை ‘முல்லை’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மே 23-ம் தேதி பணியை தொடங்கியது. இந்த இயந்திரம் பணியை முடித்து, கொளத்தூர் நிலையத்தை நேற்று வெற்றிகரமாக வந்தடைந்தது.

அப்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இணை பொது மேலாளர் எம்.கார்த்திகேயன் உள்பட பலர் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘முல்லை’, 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை, 3.8 சதவீதம் செங்குத்தான சாய்வு மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்டச் சாலையின் நடுவில் தரைப் பாதுகாப்புக்கான தேவை போன்ற அனைத்து சவால்களையும் கடந்து எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்துள்ளது.

அதேபோல், ‘குறிஞ்சி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம், கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை 1,060 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த இயந்திரம் கடினமான பாறைகள் மற்றும் 230 மீட்டர் நீளத்துக்கு வளைவுகளையும் கடந்து செல்லும்.

கொளத்தூர் மெட்ரோவில் ஒரேநேரத்தில், ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் (குறிஞ்சி) பணியைத் தொடங்கியிருப்பதும், மற்றொன்று (முல்லை) பணியை முடித்து வெளியே வந்திருப்பதும் நம் நாட்டில் இதுவே முதல் முறையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கொளத்தூரில் 246 மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்ட பணியை முடித்த ‘முல்லை’ இயந்திரம்!
டிட்வா புயலால் 3 பேர் பலி; 57 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிப்பு: தமிழக அரசு தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in