

கரூர்: கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நேற்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்டம் வாங்கலைச் சேர்ந்த பிரகாஷ் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நெருக்கமானவர்களின் பெயரில் பதிவு செய்ததாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 17 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் 2024 ஜூலை 16-ம் தேதி திருச்சூரில் கைது செய்தனர். பின்னர் அவர் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நேற்று ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அடுத்த விசாரணை ஜூலை 27-ம் தேதி நடைபெற உள்ளது.