

கனிமொழி எம்.பி
திருப்பூர்: “மேற்கை மீட்டெடுக்கும் மாநாடாக பல்லடம் மகளிரணி மாநாடு அமையும்" என கனிமொழி எம்.பி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ எனும் தலைப்பில் மேற்கு மண்டல திமுக மகளிரணி மாநாடு பல்லடம் அருகே வரும் 29-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காரணம்பேட்டையில் இன்று (டிச.23) நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பங்கேற்க வந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., கூட்டத்தில் பங்கேற்று பேசியது: “தமிழ் பெண்கள் இல்லாமல் யாரும் வெல்ல முடியாது. இந்த மாநாடு மிகப் பெரிய வெற்றியை உறுதி செய்யும் மாநாடாக அமையும்.
திமுகவுக்கு ‘மேற்கு’ சரியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மேற்கு என்பது திமுகவின் கோட்டையாகும். அதை மீட்டெடுக்கும் வகையில், இந்த மாநாடு அமையும். இந்த மாநாட்டுக்கு பிறகு மகளிருக்கு, சரிசமமாக இடம் கிடைக்கும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நமக்காக ஆட்சி செய்கிறார். விடியல் பயணம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். மகளிர் குறித்து ரீல்ஸ் பார்த்து தவறாக நினைக்கக் கூடாது. தமிழக பெண்கள் சாதனை படைப்பவர்கள். தேர்வு எழுதாமல் கூட்டத்துக்கு வந்து நில் என்று சொல்வது, திமுக அல்ல” என்றார்.
தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு செய்து ஏற்பாடு பணிகள் மற்றும் திட்டமிடல், முதல்வர் பயணவழி மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து விளக்கமாக அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்தார்.
து கனிமொழி எம்.பி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “1 லட்சம் முதல் 2 லட்சம் பெண்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். மாநாட்டில் பெண்கள் பாதுகாப்பாக சிரமமின்றி கலந்து கொள்ள அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பதால், மாநாட்டுக்கு என தனி பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை இல்லை. எனினும், மற்ற கட்சிகளுக்கு கொடுக்கும் நிபந்தனைகள் எங்கள் கட்சிக்கும் பொருந்தும்.
அதனை முறையாக பின்பற்றி மாநாடு சிறப்பாக நடைபெறும். எந்த வளர்ச்சியும் இல்லாத மாநிலமாக, கடன் மாநிலமாக விட்டு சென்றவர்தான் பழனிசாமி. இன்று இந்தியாவில் முதல் மாநிலமாக வளர்ச்சி மாநிலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி உள்ளார். மோடி சொல்லிய தேர்தல் வாக்குறுதியான ரூ.15 லட்சத்தை முதலில் கொடுக்கட்டும். தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிக்கான திட்டங்களை எதிர்பார்க்க முடியாது.
முன்னேற்றத்துக்கான திட்டங்களை, வாக்குறுதிகளை தான் வழங்குவோம். மதுக்கடைகளை தமிழ்நாட்டில் குறைத்து வருகிறோம். மற்ற கட்சியினர் தான் கருப்பு கொடிக்கு அஞ்சுவார்கள். நாங்கள் கருப்பில் இருந்து தான் வந்தவர்கள். ஆகவே எங்களுக்கு கருப்புக் கொடி காட்டினால், நாங்கள் கருப்புக்கு அஞ்ச மாட்டோம்” என்று அவர் கூறினார்.