

கனிமொழி பிரச்சாரம்
திருப்புவனம்: “பழனிசாமிக்கு ஆளுநர் பதவி நிச்சயம் உண்டு; மாநிலத்தை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்” என திமுக எம்.பி கனிமொழி விமர்சனம் செய்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி திறந்தவெளி அகழ் வைப்பகத்தை கனிமொழி எம்பி பார்வையிட்டார். அவரை கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வரவேற்றார். தொடர்ந்து அவர் திருப்புவனம், மானாமதுரையில் திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து பேசியது: “தமிழர்களின் அடையாளத்தை உலகுக்கு எடுத்துச் சென்ற மண் கீழடி என்பதால், அங்கிருந்து எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறேன்.
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி என்று உலகுக்கு பறைசாற்றும் இடம்தான் கீழடி. முதல்வர் அறிவியல் பூர்வமான கீழடி அகழாய்வு அறிக்கையை தயாரித்து மத்திய அரசிடம் கொடுத்துள்ளார். நாம் தமிழர்களாக, கீழடி பெருமைகளை உலகுக்கு எடுத்துச் செல்லப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், தமிழர்கள் பாரம்பரியத்தை உலகுக்கு எடுத்து சொன்னால், தங்களுடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி மத்திய அரசு அந்த அறிக்கையை ஏற்க மறுக்கிறது. இந்தியை திணிக்கும் பாஜகவால் கீழடியை, தமிழர்களின் பெருமையை ஏற்க முடியாது. ஆனால் அவர்களோடு அதிமுக கூட்டணி வைத்துள்ளது.
கீழடி அறிக்கையை ஏற்க பழனிசாமி மத்திய அரசின் சொல்லியிருக்க வேண்டும். அதற்கு பதிலாக அறிக்கையை மாற்றி எழுதச் சொல்கிறார். நிதிஷ்குமார் நிலை தான் பழனிசாமிக்கு ஏற்படும். நிதிஷ்குமாரை ராஜ்யசபா எம்பி ஆக்கியதை போன்று, பழனிசாமிக்கு ஆளுநர் பதவி நிச்சயம் உண்டு. அவர் மாநிலத்தை மட்டும் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதற்கு பழனிசாமி, பாத்து பத்திரமாக, சூதானமாக இருந்து கொள்ளுங்கள்.
மானாமதுரை தொகுதியில் பாஜக போட்டிடுகிறது. இங்கு தேர்தலை தாண்டி போர் நடக்க இருக்கிறது. அது கீழடிக்கும், நாக்பூருக்குமான போட்டியாக இருக்கும். நமது வெற்றி தமிழகத்துக்கு மட்டுமல்ல; இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கானது.
அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக ‘காப்பி’ அடிப்பதாக பழனிசாமி கூறுகிறார். அவரது அறிக்கையை மக்களே படிப்பதில்லை. நாங்கள் ஏன் படிக்க போகிறோம். திமுக தந்த ரூ.5,000-ஐ பார்த்து பயத்தில் தான் பழனிசாமி ரூ.10,000 தருவதாக அறிவித்துள்ளார். அவர் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை; நிறைவேற்ற போவதும் இல்லை. அவர் தேர்தலில் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர் என்பது மக்களுக்கு தெரியும்.
எமர்ஜென்சி காலம் முடிந்து தேர்தல் வந்தபோது, நேரு மகளே வருக; நிலையான ஆட்சி தருக என்று இந்திரா காந்தியை அழைத்து, ‘உறவுக்கு கை கொடுப்போம்; உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்று கருணாநிதி கூறினார். அந்த வாசகத்தை பழனிசாமி தனது தேர்தல் அறிக்கையில் ‘காப்பி’ அடித்துள்ளார்.
மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அறிவித்தது, அதை ரூ.2,000 உயர்த்தியது மு.க.ஸ்டாலின். அதை காப்பி அடித்தவர் பழனிசாமி. வெற்றி பெறுவர்களை பார்த்து தான் ‘காப்பி’ அடிப்பது வழக்கம்.
பழனிசாமி தோல்வி அடைய போகிறார். அவரது தேர்தல் அறிக்கையை நாங்கள் ஏன் ‘காப்பி’ அடிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி காட்டியதால், திமுக தேர்தல் அறிக்கையை மக்களே எதிர்பார்த்தனர்” என்று அவர் பேசினார்.
முன்னதாக கீழடியில் கனிமொழி செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது: “திராவிட மாடல் 2.0 ஆட்சி மறுபடி அமையும் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. இதனால் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். விஜய் 2 இடங்களில் போட்டியிடுவது அவருக்கும், அவரது கட்சிக்கும் எந்தவிதமான நம்பிக்கை இருக்கிறது என்பதை காட்டுகிறது.
ஆனால், கருணாநிதி, ஸ்டாலின் யாராக இருந்தாலும் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர்கள். இது தான் எங்களுடையே நம்பிக்கை. சோனியா காந்தி உடல்நலம் இல்லாமல் இருந்ததால் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட கொஞ்சம் காலதாமதம் ஆகிறது. இன்னும் பாஜக கூட பட்டியல் வெளியிடவில்லை.
விஜய் பிரச்சாரத்தின்போது பேருந்து வந்ததை எல்லாம் குற்றமாக கூறுகிறார்கள். மக்களுக்காக தான் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்து, ஆம்புலன்ஸ் எதுவுமே அப்பகுதியில் போக கூடாது என்றால் என்ன நியாயம்? மேலும் பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தான் அனுமதி கொடுக்கிறது. இதில் அரசு என்ன செய்ய முடியும்.
நாங்கள் ரூ.8,000-க்கு பொருட்கள் வாங்க டோக்கன் தருகிறோம் என்றதும், பழனிசாமி ரூ.10,000 தருவதாக கூறுகிறார்” என்று அவர் கூறினார்.