

கனிமொழி எம்.பி பிரச்சாரம்
நாமக்கல்: “எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பயம் போய் தற்போது தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதனால் என்ன பேசுறோம் என தெரியாமல் முதல்வரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார்” என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், நாமக்கல், குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: “நாமக்கல்லில் முதன்முறையாக நிறுத்தப்பட்டுள்ள பெண் வேட்பாளர் ராணி. நாம் உரிமையோடு, பெருமையோடு வந்து வாக்கு கேட்கிறோம். ஏனெனில், சொன்ன வாக்குறுதியெல்லாம் நிறைவேற்றி தந்ததால் உரிமையோடு வந்து வாக்கு கேட்கிறோம்.
மகளிர் உரிமைத் தொகை ஒரு மாதம் கழித்து மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். திமுக கூட்டத்தில் எல்லாரும் இரண்டு விரலை காண்பிக்க தொடங்கிவிட்டனர். ஏனெனில் இரண்டு எனில் 2 ஆயிரம் ரூபாய் தான்.
எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளர்களின் நிலைமையெல்லாம் என்ன ஆயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். பிஹாரில் எத்தனையோ முறை முதல்வராக இருந்த நிதிஷ் குமார், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக அனுப்பப்பட்டுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்த எத்தனையோ கட்சிகள் காணாமல் போய்விட்டன. எனவே எடப்பாடி பழனிசாமி பார்த்து பத்திரமாக இருந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தேர்தல் முடிந்த பின் ஏதோ ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக அனுப்பப்படுகிறார்கள். ஆளூநர் வேலை பெரிய கஷ்டம் எதுவும் இல்லை.
சசிகலா காலில் விழுந்து பதவிக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, கடைசியில் அவருக்கு கட்சியில் இடம் இல்லை என கூறிவிட்டார். ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் இடம் இல்லை என கூறிவிட்டார். அதனால் தமிழகத்தை காப்பற்ற வேண்டுமெனில் முதல்வர் ஸ்டாலினால்தான் முடியும் என முடிவெடுத்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
தமிழகத்துக்கும், தன்னை வளர்த்துவிட்டர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துக் கொண்டுள்ளார். இன்று அண்ணா திமுக, அமித் ஷா திமுகவாகிவிட்டது. அதனால் அவரை நிச்சயம் ஆளுநராக அனுப்புவார்கள். இவரைப் போல் அடிமை யாரும் கிடைக்க மாட்டார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் பயம் போய் தற்போது அவருக்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அதனால் என்ன பேசுறோம் என தெரியாமல் முதல்வரை கீழ்த்தரமாக விமர்சனம் செய்கிறார். எதிர்க்கட்சி தலைவர் என்பதை மறந்து விமர்சனம் செய்கிறார்.
இதற்கெல்லாம் தமிழக மக்கள் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு சரியான பாடத்தை புகட்டுவர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, இப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து உள்ளார். பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்கள் நிலை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியும்.
தமிழக மக்களின் உரிமைகளுக்காக போரடும் இயக்கம் திமுக. தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்து தமிழகத்திற்கு உண்டான மக்களவை தொகுதியை குறைக்க முயற்சி நடக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றால் அதிமுக ஆட்சியில் செல்போன் தருவோம் என கூறியது என்ன ஆனது.
தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.8 ஆயிரம் கூப்பன் தருகிறோம். உங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருளை வாங்கிக் கொள்ளலாம். இந்த தேர்தல் தமிழகத்தின் கீழடிக்கும், வட இந்தியாவில் ஆஎர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கும் இடையிலான தேர்தல். நிச்சயம் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்று அவர் பேசினார்.