

ஜெகத்ரட்சகன் எம்.பி
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து நாட்டிலேயே முதன்மையாக மாற்றுவோம் என திமுக கொள்கை பரப்பு செயலர் ஜெகத்ரட்சகன் எம்பி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி திமுக சார்பில், திராவிட பொங்கல் விழா மேட்டுப்பாளையம் ஐயப்பன் கோயில் எதிரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், மாநில திமுக அமைப்பாளருமான சிவா தலைமை வகித்தார்.
திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி கலந்து கொண்டு திராவிட பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏராளமான மகளிர் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதையடுத்து நாட்டுப்புற பாடல் இசை கச்சேரி, மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன. மேலும் விழாவில் கழக மூத்த முன்னோடிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
விழாவில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. பேசுகையில், "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தந்து, இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்கு திமுக அர்ப்பணிப்போடு பணியாற்றி வருவகிறது.
உங்களில் ஒருவராக, உங்களுக்காக ஓடோடி உழைப்பதற்கும், உங்களுக்கு பணி செய்ய உத்தரவிடுங்கள் என கேட்டு நாங்கள் வந்துள்ளோம். திமுக தாய் பாசம் மற்றும் சகோதர பாசம் கொண்ட இயக்கம்.
புதுச்சேரியை பொருத்தவரைக்கும் இந்த ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமையும், வளமான வலிமையான புதுச்சேரியை உருவாக்குவதற்கு திமுக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே மக்கள் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை" என்றார். இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.