வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத முதியோருக்கு மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத முதியோருக்கு மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்
Updated on: 
1 min read

திருவாரூர்: வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத முதியவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், முதியவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையாக ரூ.1,200 வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை, மத்திய அரசின் உத்தரவுப்படி நடப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா முறையின்கீழ் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் 14.37 லட்சம் முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதியோர் உதவித் தொகை, வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.

இதையடுத்து, மாவட்ட வாரியாக முதியவர்களின் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் முடுக்கிவிட்டுள்ளன.

உதாரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் 60,300 முதியவர் மாதாந்திர உதவித் தொகை பெறும் நிலையில், 3,035 பேருக்கு ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு இந்த மாத உதவித் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இவர்களுக்கு உதவித் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற முகாமில் 1,539 பேரின் ஆதார் எண், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு விட்டது.

எஞ்சியுள்ள முதியவர்களின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து முதியவர்கள் சிலரிடம் கேட்டபோது, ‘‘ஆதார் எண் வழங்கியபோது நாங்கள் செல்போன் வைத்திருக்கவில்லை.

ஆதார் எண் அலுவலரே செல்போன் எண்ணை போட்டு பதிவு செய்து ஆதார் எண் பெற்றுக் கொடுத்தார். தற்போது ஆதார் எண் இணைக்கச் சென்றால், உங்களது செல்போன் எண்ணுக்கு ஓடிபி எண் வரும் என்றும், அதை கூறினால்தான் இணைக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ஓடிபி எண் வராமல் பல முதியவர்கள் உதவித் தொகை வாங்க முடியாத நிலை உள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சமூகப் பாதுகாப்பு திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு மட்டுமே நேரடியாக உதவித் தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், முதல்கட்டமாக ஆதார் எண் இணைப்பதற்கு பயனாளிகளுக்கு உதவ தமிழக அரசு உத்தரவின்படி முகாம்களை நடத்தி வருகிறோம்.

செல்போன் இல்லாமல் ஓடிபி எண் பெற முடியாத பயனாளிகள் குறித்து அடுத்தகட்டமாக மத்திய அரசு அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர்.

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்காத முதியோருக்கு மாதாந்திர உதவித் தொகை நிறுத்தம்
தூக்கத்தைக் கெடுக்கும் திறன்பேசிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in