

தூத்துக்குடி: தமிழக முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல் துறையினரின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கடந்த 18-ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் மார்க்கண்டேயன் எம்எல்ஏவை கடந்த 20-ம் தேதி காலை கைது செய்தனர். பின்னர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வைத்து சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு பிறகு, அவரை இரவில் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை ஆகஸ்ட் 3-ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சுமதி உத்தரவிட்டார். இதையடுத்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வழக்கறிஞர்கள் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதேபோல் அவரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்றத்தில் நீதிபதி சுமதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ பலத்த பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம் போலீஸார் ஏற்கெனவே போதுமான அளவுக்கு விசாரணை நடத்திவிட்டனர். எனவே போலீஸ் காவல் தேவையில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதேபோல் முதல்வர் குறித்து மிக கடுமையாகவும், மிரட்டல் விடுத்தும் பேசியிருப்பதால் அவருக்கு ஜாமீன் தரக் கூடாது என காவல் துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுமதி, மார்க்கண்டேயன் எம்எல்ஏவின் ஜாமீன் மனு மற்றும் போலீஸ் காவல் கோரிய காவல் துறையினரின் மனு ஆகிய 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ மீண்டும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மார்க்கண்டேயன் எம்எல்ஏவை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்ததை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான திமுகவினர் கூடியிருந்தனர். அங்கிருந்த தனது ஆதரவாளர்களை மார்க்கண்டேயன் எம்எல்ஏ சந்தித்து பேசினார்.
அப்போது 'எவ்வளவு நாள் நான் சிறையில் இருக்கிறேனோ, அவ்வளவு வேகத்தில் நாம் ஆட்சிக்கு வருவோம். மேலும் சிறையில் நன்றாக இருக்கிறேன். அங்கு 25-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. அதனை படித்து வருகிறேன். என்னை பார்க்க யாரும் வர வேண்டாம்' என்று கூறினார்.