

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அந்த தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.
தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து, தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க இன்று மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு வருகை தந்தார்.
கொளத்தூர் தொகுதியில் வாகனப் பேரணியாக சென்றபடி வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். அவருடன் திமுக எம்எல்ஏ சேகர்பாபுவும் உடனிருந்தார்.
2011-ஆம் ஆண்டு முதல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றிருந்த மு.க.ஸ்டாலின், இம்முறை தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தார். ஜெயலலிதாவுக்குப் பிறகு முதல்வராக இருந்தபோதே தோல்வியடைந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்ற நிலையில், மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்று 8795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதிமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணன் 18,430 வாக்குகளும், நாதக வேட்பாளர் சவுந்தர பாண்டியன் 5046 வாக்குகளும் பெற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை பிடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.